முழு உடல்தகுதியுடன் இருந்தால் தான் பெரிய ஸ்கோர்களை எட்ட முடியும் என கொல்கத்தா அதிரடி வீரர் ஆன்ட்ரே ரஸ்ஸல் கூறியுள்ளார்.
மும்பை-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முதலில் ஆடிய கொல்கத்தா 232-2 ரன்களை குவித்தது. ரஸ்ஸல் 80, ஷுப்மன் கில் 76 ரன்களை விளாசினர். பின்னர் ஆடிய மும்பை அணி போராடி 198-7 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருது பெற்ற ரஸ்ஸல் கூறியதாவது-
நான் அவெஞ்சர்ஸ் பட ரசிகன். என்னை ரசிகர்கள் சூப்பர் ஹீரோ என கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது. கை கண், பேட் செயல்பாடு போன்றவை தான் ஷாட்களை தீர்மானிக்கிறது. எனது தோள்களில் இருந்து தான் சக்தி கிடைக்கிறது. உடல் தகுதியுடன் இருந்தால் தான் பெரிய ஸ்கோர்களை அடிக்க முடியும். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த 2 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும். 200 ரன்கள் எடுத்திருந்தால் கூட வெற்றி நழுவியிருக்கும். அழுத்தமான நேரங்களில் கட்டுப்பாட்டுடன் திட்டமிட்டு ஆடுகிறோம் என்றார்.
தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா கேப்டன்): நாங்கள் பெரிய ஸ்கோரை எட்டினாலும், மும்பை அணியினர் சிறப்பாக சேஸ் செய்தனர். இதனால் எங்களுக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. அனைத்து வீரர்களும் முழு தகுதியுடன் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். மும்பையை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. பிட்ச் மிகவும் தட்டையாக காணப்பட்டது. ஹார்திக் பாண்டியா மிகவும் சிறப்பாக ஆடினார். கொல்கத்தா பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். ரஸ்ஸல் மிகவும் சிறப்பான வீரர். அவரது முதிர்ச்சி தன்மை மிகவும் பலன் தந்தது என்றார்.
ரோஹித் சர்மா (மும்பை கேப்டன்): எங்கள் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. எல்லா வகைகளிலும் நாங்கள் முயற்சித்து பார்த்தோம். பவுன்சர், யார்க்கர்களை வீசினோம். கொல்கத்தா வீரர்கள் லீன், கில், ரஸ்ஸல் அபாரமாக ஆடினார்கள். இது எங்களுக்கு அனுபவமாகும். மேலும் சோதனையாக அமைந்தது. வீரர்கள் இணைந்து ஆடாதது பாதிப்பை ஏற்படுத்தியது. மீண்டும் ஒருங்கிணைந்து ஆட வேண்டும். அடுத்து 2 ஆட்டங்களை சொந்த மைதானத்தில் ஆட உள்ளோம். அவற்றை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ளோம்.
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது அவுட்டான விரக்தியில் ஸ்டம்புகளை தள்ளியதால் மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
கொல்கத்தாவிடம் 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோல்வியுற்றது. ரோஹித் சர்மா 12 ரன்களுக்கு எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார். இதனால் அதிருப்தி அடைந்த அவர் அருகே இருந்த ஸ்டம்புகளை தட்டி விட்டார். இது ஐபிஎல் நடத்தை நெறிகளை மீறிய செயல்பாடு என்பதால், அவருக்கு ஆட்ட ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
ரோஹித் தன் மீதான புகாரை ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.