இங்கிலாந்தில் முதல் ஒருநாள் போட்டியை ஆடி வரும் இந்திய அணி சிறப்பாக பந்துவீசி வருகிறது. இதில், குலதீப் யாதவ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்தில் புதிய சாதனை படைத்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
பந்துவீச முடிவு செய்தது இந்தியா
இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் மீண்டும் இடம்பெற்றுள்ளார், தீபக் சாஹர் மற்றும் புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பெறவில்லை.
அதே போல் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான அலெக்ஸ் ஹேல்ஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடாவில்லை. மார்க் வுட், ஸ்டோக்ஸ், ஜோ ரூட் போன்ற சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
குல்தீப் ஆதிக்கம்
துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய், ஜானி பைர்ஸ்டோவ் இருவரும் தலா 38 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் அமைத்து குலதீப் பந்தில் வெளியேறினார்கள்.
அடுத்ததாக களமிறங்கிய ஜோ ரூட் 3 ரன்களில் குலதீப் பந்திலும், கேப்டன் மோர்கன் 19 ரன்களில் சஹால் வசமும் அவுட் ஆகி வெளியேற 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய நிலையில், ஸ்டோக்ஸ் – பட்லர் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
அதன்பின் நிதானமாக ஆடிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். ஜோஸ் பட்லர் 53 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 50 ரன்களிலும் குலதீப் வசம் அவுட் ஆகி வெளியேறினர். 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த குலதீப் தனது 10வது ஓவரை வீசுகையில் மேலும் ஒரு விக்கெட்டான வில்லி யையும் வெளியேற்றினார்.
குல்தீப் சாதனை
10 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப், ஸ்பின்னர்கள் சார்பில் இங்கிலாந்து மண்ணில் சிறப்பான பந்து வீச்சை பதிவு செய்து சாதனை படைத்தார். இதற்க்கு முன்பு பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் அப்ரிடி 11 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தியதே சிறப்பான பந்துவீச்சாக இருந்தது.