மாஹி பாய்க்கும் எனக்குமான உறவு.. சொல்லித்தான் தெரியனுமா! – குல்தீப் யாதவ் ஓபன் டாக்
தோனிக்கும் எனக்குமான உறவு இந்திய அணியில் மறக்க முடியாத ஒன்று என மனம் திறந்து பேசியுள்ளார் சுழல்பந்து வீச்சாளர் குல்திப் யாதவ்.
இந்திய அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் யூசுவேந்திர சஹால் மற்றும் குல்திப் யாதவ் ஜோடி, இதற்கு முன்னர் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் ஜோடியை பின்னுக்கு தள்ளி முன்னணி சுழல் பந்துவீச்சு ஜோடியாக மாறியது.
குறிப்பாக குல்தீப் யாதவ் சைனமான் வகை பந்துவீச்சாளர் என்பதால் அவரை கணிக்க பேட்ஸ்மேன்கள் திணறி வந்தனர். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தொடர்களில் அபாரமாக பந்துவீசி குறுகிய காலத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
25 வயதே ஆன குல்தீப் யாதவ் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளிலும், 60 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் 21 டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக ஆடி 150 க்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இவரது சராசரி மிகச் சிறப்பாகவே இருக்கிறது.
இந்நிலையில், இந்திய அணியில் அறிமுகம் ஆனப்பொழுது, கேப்டன் விராட் கோலியும் மூத்த வீரரான தோனியும் இவருக்கு எவ்வாறு உதவி இருக்கிறார்கள் மற்றும் தோனி உடனான உறவு எத்தகையது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
குல்தீப் யாதவ் கூறுகையில், “நிச்சயமாக தோனி பலருக்கு உதவுவது போல் எனக்கும் உதவியிருக்கிறார். ஒரு பந்து வீச்சாளருக்கு சிறந்த விக்கெட் கீப்பர் அமைவது பாக்கியம். ஏனெனில் பேட்ஸ்மேன் நடவடிக்கைகளைக் கவனித்து அதற்கு ஏற்றார்போல் பந்துவீச சொல்வார்கள்.
தோனி போன்று அனுபவம் மிக்க விக்கெட் கீப்பர் கிடைத்ததே எனக்கு பெரிய லக். ஆனால் நான் தோனியை மட்டுமே சார்ந்து இருந்தேன் எனக் கூறுவது தவறு. கத்துக்குட்டியான நான் மெதுவாக என்னை வளர்த்துக் கொண்டேன். கிரிக்கெட் என்பது ஒட்டுமொத்த அணியாக செயல்படுவது. அதில் தோனியின் பங்கு அதிகமானவை. ஆனால் அவர் மட்டுமே செய்தார் எனக் கூறுவதும் தவறு.” என்றார்.