முன்னாள் இலங்கை அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்காரா பெருமைக்குரிய எம்.சி.சி என்று அழைக்கப்படும் மெர்லிபோன் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக (பிரெசிடென்ட்) நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இவர் ஓராண்டுக்கு இந்த மதிப்புக்குரிய பதவியில் நீடிப்பார்.
41 வயது குமார் சங்கக்காரா எம்.சி.சியின் கவுரவ ஆயுள் உறுப்பினராக இருக்கிறார். கடந்த 7 ஆண்டுகாலமாக செல்வாக்கு மிக்க எம்.சி.சியில் அவர் கவுரவர் ஆயுள் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.
இது குறித்து சங்கக்காரா கூறும் போது, “எம்சிசி பிரெசிடென்ட் பதவி எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இந்தப் பொறுப்பை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தேன்.
என்னைப் பொறுத்தவரையில் எம்.சி.சி உலகின் மிகச்சிறந்த ஒரு கிரிக்கெட் கிளப். உலக அளவில் அதற்கு பெரிய ரீச் இருக்கிறது. கிரிக்கெட்டுக்காக நிறைய எம்.சி.சி செய்துள்ளது.
இத்தகைய அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகளில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பது பெருமையாக உள்ளது” என்றார்.
கிரிக்கெட் விதிகளின் பாதுகாவலன் மற்றும் இயற்றுநரான எம்.சிசி. 1787ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வரலாற்றில் இதுவரை 168 பேர் இதன் தலைவராக இருந்துள்ளனர், பிரிட்டீஷார் அல்லாத ஒருவர் முதல் முறையாக பிரசிடென்ட் ஆவது இதுவே முதல் முறை, அந்தப் பெருமையை ஆசியாவைச் சேர்ந்த சங்கக்காராவுக்குக் கிடைத்துள்ளது.
அக்டோபர் 1 முதல் இந்தப் பதவியில் ஒரு வருடக் காலத்துக்கு அவர் அமர்த்தப்படுவார். இதன்மூலம், பாரம்பரியமிக்க எம்சிசி அமைப்பின் இங்கிலாந்து குடிமகனாக அல்லாத முதல் தலைவர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் சங்கக்காரா. கிரிக்கெட் போட்டிகளை நிர்வகித்து வரும் ஐசிசி அமைப்புக்கு கிரிக்கெட் ஆட்டங்களுக்கான விதிமுறைகளைப் பரிந்துரை செய்யும் பணியை எம்சிசி வேர்ல்ட் கிரிக்கெட் கமிட்டி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.