ஐபிஎல் தொடரில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் இன்று மோதுகின்றன.
பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இப்போது நடந்து வருகிறது. இந்தத் தொடரின் 7 வது லீக் போட்டியில் ஐதராபாத்தும் மும்பையும் நேற்று மோதின. இதில் ஐதராபாத் திரில்லிங் வெற்றி பெற்றது. 8-வது லீக் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராத் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் இன்று மோதுகின்றன.
கொல்கத்தா அணியுடனான முதல் போட்டியில் அடைந்த தோல்வியால், இந்தப் போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று பெங்களூர் அணி முடிவு செய்துள்ளது. இதற்காக பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் அந்த அணி, கடும் பயிற்சியில் நேற்று ஈடுபட்டது.
பஞ்சாப் அணியில் இருக்கும் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர் ஆகியோர் கர்நாடகா அணிக்காக விளை யாடுபவர்கள். பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்திலேயே உருண்டு புரண்டவர்கள் என்பதால், இந்தப் போட்டியில் அதிரடி யாக வெற்றி பெற முடிவு செய்துள்ளனர். உள்ளூரில் இவர்களுக்குத் தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் இது அவர்களுக்கு பிளஸ் பாயின்டாக அமையலாம்.
பெங்களூர் அணியை பொறுத்தவரை உள்ளூர் வீரர்கள் என்று பவன் தேஷ்பாண்டே, அனிருத்தா ஜோஷி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இருந்தாலும் விராத், டிவில் லியர்ஸ், டி காக், பிரண்டன் மேக்குலம் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். இவர்கள் இன்றைய போட்டியில் ஜொலித்தால் பெங்களூர் அணிக்குச் சாதகமாக இருக்கும். இன்றைய போட்டியில் விராத் சில மாற்றங்களை செய்வார் என்று தெரிகிறது. டி காக்கிற்குப் பதில் பார்த்திவ் படேல் விக்கெட் கீப்பராகவும் இன்னொரு ஆல்ரவுண்டராக நியூசிலாந்தின் கிராண்ட் ஹோ மை அவர் களமிறக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
பஞ்சாப் அணியில் இன்றைய போட்டியிலும் கிறிஸ் கெயில் களமிறங்குவாரா என்பது சந்தேகம்தான். கே.எல்.ராகுல், கருண் நாயர் அதிரடியில் கலக்குவதால் அந்த அணி தெம்பாக இருக்கிறது. இன்றைய போட்டியில் அனுபவ வீரர் யுவராஜ் சிங், தன் பங்குக்கு பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டால் பஞ்சாப் எளிதாக வெற்றி பெறும். இதன் காரணமாக இன்று இரவு 8 மணிக்குத் தொடங்கும் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.