உலகச் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும் விராட் கோலி 44 ரன்களும் ரோஹித் சர்மா 34 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி சார்பாக ஜேமிசன் 5 விக்கெட்டுகளை ( ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், இஷாந்த் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா ) கைப்பற்றி அசத்தினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜேமிசனை அனைத்து நியூசிலாந்து ரசிகர்ளும் தற்போது பாராட்டி வருகின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஜேமிசன்
8 போட்டிகளில் விளையாடியுள்ள ஜேமிசன் இதுவரை 96 மெய்டன் ஓவர்கள் வீசி இருக்கிறார். அதேபோல 44 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவருடைய ஆவெரேஜ் 14.14 மற்றும் எகானமி 2.37 மட்டுமே. இதுவரை ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை ( 5 விக்கெட் ஹால் ) ஐந்து முறை கைப்பற்றியிருக்கிறார். அதேபோல ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை ஒருமுறை கைப்பற்றியிருக்கிறார்.
நியூசிலாந்து அணியில் புதிய சாதனை படைத்த ஜேமிசன்
இந்தியா முதல் இன்னிங்சில் விளையாடிய பொழுது கைல் ஜேமிசன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில் ஜேமிசன் இருந்தார்.
ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் ஜேமிசன் பந்தில் அவுட் ஆகி விட, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அது அவருடைய 42வது விக்கெட்டாக பதிவானது. அதன் மூலம் நியூசிலாந்து அணி பந்து வீச்சாளர்களில் முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் 42 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கிற சாதனையையும் நேற்று அவர் புரிந்தார்.
இதற்கு முன்பாக நியூசிலாந்து அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாக் கோவி 8 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக இருந்தார். ஆனால் நேற்று அந்த சாதனையை ஜேமிசன் முறியடித்தார். மேலும் நேற்றைய போட்டியில் இஷந்த் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைல் ஜேமிசன் கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 217 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாட தொடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய லேதம் 30 ரன்களும், கான்வாய் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தற்பொழுது கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டைலர் ஜோடி பேட்டிங் செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.