வளர்ந்து வரும் ஆப்கான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக உலகக்கோப்பை போட்டிகளுடன் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் விலகினார். இடையில் ஆண்டி மோல்ஸ் என்பவர் பயிற்சியாளராக பொறுப்பில் இருந்தார்.
மொத்தம் 50 பேர் ஆப்கான் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்திருந்தனர், இதில் லான்ஸ் குளூஸ்னர் அவர்களை ஈர்த்துள்ளார்.
லான்ஸ் குளூஸ்னர் 1996-2004 காலக்கட்டத்தில் 49 டெஸ்ட் போட்டிகள் 171 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 1906 ரன்களையும் 80 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார், ஒரு இன்னிங்சில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியிருப்பவர் லான்ஸ் குளூஸ்னர். இவர் காலத்தில் எதிரணியினரை அச்சுறுத்தும் ஒரு ஆல்ரவுண்டராக அவர் திகழ்ந்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 3576 ரன்களையும் 192 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 2016-ல் ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் கோச்சாக பணியாற்றினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் கோச்சாகவும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பணியாற்றி தன் கோச்சிங் திறமைகளை வளர்த்துக் கொண்டவர் குளூஸ்னர்.
இது தொடர்பாக குளூஸ்னர் தெரிவிக்கும் போது, “எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம், ஆப்கான் அணி அச்சமற்ற வகையான கிரிக்கெட்டை ஆடிவருகிறது என்பதை அனைவரும் அறிவர், இன்னும் கொஞ்சம் கடின உழைப்பைப் போட்டால் உலகின் சிறந்த அணிகளுள் ஒன்றாக எழுச்சி பெறும். எனவே இந்த அணியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்றார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற பிறகு மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும் அதன்பின் அயர்லாந்து, வங்காளதேச அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றது.
வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்ற கையோடு, முத்தரப்பு டி20 கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வங்காள தேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் சாம்பியன் கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆப்பாகிஸ்தான் சிறந்த அணியாக உருவெடுக்க வேண்டுமென்றால், தலைசிறந்த அணிக்கெதிராக விளையாட வேண்டும் என்று கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நாங்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இரண்டு முறைதான் விளையாடியுள்ளோம். அவர்களுடைய பலம் மற்றும் பலவீனம் எங்களுக்கு தெரிந்திருக்கும். இதை நிச்சயமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு சிறந்த உதாரணம் வங்காளதேசம். அவர்கள் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிகமான போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள். இதனால் உலகக்கோப்பையில் அவர்கள் சிறந்த முடிவை பெற்றனர்.
நீங்கள் சிறந்த அணியாக இருக்க வேண்டுமென்றால், தலைசிறந்த அணிகளுக்கு எதிராக அதிக போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். நான்கு வருடத்தில் ஒரு போட்டி என்பது சரியானதாக இருக்காது. எங்கள் அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசுகிறார்கள்.
நாங்கள் ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கு எதிராக விளையாடும்போது, 140 கி.மீட்டர் வேகத்தில் வீசும் பந்து வீச்சாளர்கள் அரிதுதான்.’’ என்றார்.