டெஸ்ட் அரங்கில் தனது 400 ரன்கள் சாதனையை இந்த இரு இந்தியர்கள் மட்டுமே முறியடிப்பர் என மனம் திறந்துள்ளார் பிரையன் லாரா.
டெஸ்ட் போட்டிகளில் ஒரு தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக விண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவின் 400 ரன்கள் உள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
அதன்பின், கிரிக்கெட் உலகில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டபோதும், லாராவின் 400 ரன்கள் சாதனையை யாராலும் நிகழ்த்த முடியவில்லை. அந்த சாதனையை தகர்க்க, வீரர்களிடம் விடாமுயற்சி மற்றும் நிதானம் தேவை.
ஆனால், தற்போது இருக்கும் வீரர்கள் மத்தியில் அவை மிகக்குறைவு என்பதால் இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளது என கருத்துக்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில் பிரையன் லாரா தனது சாதனையை இந்தியாவைச் சேர்ந்த இருவரால் மட்டுமே முறியடிக்க முடியும் எனக் தெரிவித்துள்ளார். அதில் இந்திய அணியின் தொடக்க துவக்க வீரர் ரோகித் சர்மாவும், 19 வயதான இளம் வீரர் பிருத்வி ஷா இருவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
ரோகித் சர்மா ஒருநாள் போட்டியிலேயே 264 ரன்கள் அடித்துள்ளார். அவரது நிதானம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதேபோல் தற்போது டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீராகவும் மாற்றப்பட்டுள்ளதால், இவரால் நிச்சயம் 400 ரன்களை கடக்க இயலும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை 2 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள பிருத்வி ஷாவின் பெயரை லாரா குறிப்பிட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் மிகவும் நிதானமான துவக்க வீரராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.