இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக சக இலங்கை அணி வீரர்கள் உள்ள வாட்ஸ்ஸப் குரூப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் தற்போது மும்பை அணிக்காக ஆடி வரும் லசித் மலிங்கா இலங்கை அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஆவார். அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்று சிறப்பாக ஆடினார். இதனால் உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அவரும் சில தினங்களுக்கு முன்பாக உலகக்கோப்பை அணியில் தனது யுக்தி மற்றும் எப்படி செயல்படுவது என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். இந்நிலையில், இன்று காலை 11 மணி அளவில் கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் வாட்ஸ்ஸப் குரூப்பில் உலக கோப்பைக்கு முன்னதாக ஓய்வுபெற இருப்பதாக மறைமுகமாக மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த மெசேஜ் அனுப்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த தேர்வாளர்கள் அஷந்தா டி மெல் மலிங்காவிடம் பேசி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர அனுப்பிய மெசேஜ் சிங்களத்தில் இருந்தது. அதில் அவர் குறிப்பிட்டதாவது, “இனி மைதானத்தில் நாம் சந்திப்பது சாத்தியமில்லாத ஒன்று. இதுவரை என்னுடன் இவ்வளவு நாட்கள் பயணித்து வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. எனக்கு தொடர்ந்து அளித்துவந்த சப்போர்ட் அனைத்திற்கும் எனது நன்றி. வருங்காலத்தில் சிறப்பாக செயல்படுங்கள்” என்றவாறு இருந்தது.
தேர்வாளருக்கும் மலிங்காவிற்கும் இடையேயான பேச்சுவார்த்தையில், “உலக கோப்பை தொடரில் முழுவதுமாக உங்களால் ஈடுபட முடியுமா? என்றவாறும், கேப்டன் பொறுப்பு இல்லாமலும் அணியில் நீடிக்க முடியுமா?” என்றவாறும் இருக்கலாம் என்கிற தகவல்களும் பரவி வருகின்றன.
காரணம், இதுவரை மலிங்காவின் கேப்டன் பொறுப்பில் 14 முறை ஆடியுள்ள இலங்கை அணி 13 முறை தோல்வியை தழுவியுள்ளது.
இதனாலேயே, மலிங்கா இப்படி ஒரு செய்தியை அனுப்பியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.