தனது மாமியார் காலமானதால், நாடு திரும்பினார் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லஸித் மலிங்கா.
டான்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த இலங்கை-வங்கதேச அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்டது. இந்நிலையில் அவரது மாமியார் காலமானதாக கிடைத்த தகவலை அடுத்து உடனே நாடு திரும்பினார் மலிங்கா. அடுத்து வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆட்டத்தில் மலிங்கா பங்கேற்பார் எனத் தெரிகிறது.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம்: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தின் போது ஆஸி. ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயமுற்றதால், அடுத்த முக்கியமான பாகிஸ்தானுடன் நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மிச்செல் மார்ஷ் இடம் பெறுகிறார். எத்தனை ஆட்டங்களில் ஸ்டாய்னிஸ் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படவில்லை.இலங்கை-வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் முழுமையாக கைவிடப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
இலங்கை அணி 3 ஆட்டங்களில் தலா 1 வெற்றி, 1 தோல்வியைப் பெற்றது. மேலும் ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு முடிவின்றி கைவிடப்பட்டது. 3 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளது.
அதே நேரத்தில் 3 ஆட்டங்களில் ஆடிய வங்கதேசம், 1 வெற்றி, 2 தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்தில் உள்ளது. போட்டியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது 2 அணிகளுக்கு கட்டாயமாகும். இந்நிலையில் டாஸ் கூட வீசப்படாத நிலையில் பலத்த மழை பெய்தது.
நடுவர்கள், இரு அணிகளின் கேப்டன்கள் மைதானம் மற்றும் பிட்சில் சென்று ஆய்வுசெய்தனர். எனினும் மழை தொடர்ந்து பெய்தததாலும், நீர் தேங்கியதாலும், ஓவர்களை குறைத்தும் ஆட்டத்தை நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து இலங்கை-வங்கதேசம் இடையிலான ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி: இதைத் தொடர்ந்து இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இலங்கை 4 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும், வங்கதேசம் 3 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும் உள்ளன.
கைவிடப்பட்ட 3-ஆவது ஆட்டம்: 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் மழை பாதிப்பால் கைவிடப்படும் மூன்றாவது ஆட்டம் இதுவாகும். அதே நேரத்தில் இலங்கைக்கு இது 2-ஆவது ஆட்டமாகும்.