சர்வதேச டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி., இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 2 போட்டியிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்த இஷான் கிஷனை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வெகுவாக பாராட்டி வரும் நிலையில், இஷான் கிஷன் சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலிலும் புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்கா அணியுடனான நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இஷான் கிஷன் தரவரிசை பட்டியலில் 68 இடங்கள் முன்னேறி, 7வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய பேட்ஸ்மேனும் தற்போது இஷான் கிஷன் தான். முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வானும், மூன்றாவது இடத்தில் தென் ஆப்ரிக்கா அணியின் மார்கரமும் உள்ளனர்.
20 ஓவர் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை. முதல் இடத்தில் முகமது நபியும், இரண்டாவது இடத்தில் ஷாகிப் அல் ஹசனும், மூன்றாவது இடத்தில் மொய்ன் அலியும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஜாஸ் ஹசில்வுட் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அடில் ரசீதும், மூன்றாவது இடத்தில் தப்ரைஸ் சம்சியும் உள்ளனர்.