எனது சிறப்பான ஆட்டத்திற்கு இவர் தான் காரணம்; ஸ்ரேயஸ் ஐயர் ஓபன் டாக் !!

AUCKLAND, NEW ZEALAND - JANUARY 26: Shreyas Iyer of India bats during game two of the Twenty20 series between New Zealand and India at Eden Park on January 26, 2020 in Auckland, New Zealand. (Photo by Phil Walter/Getty Images)

எனது சிறப்பான ஆட்டத்திற்கு இவர் தான் காரணம்; ஸ்ரேயஸ் ஐயர் ஓபன் டாக்

விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் சேஸிங் மாஸ்டராக ஷ்ரேயாஸ் ஐயர் திகழ்கிறார். விராட் கோலிக்கு அடுத்து மிகப்பெரிய இடமான சேஸிங் கிங் என்ற இடத்தை ஷ்ரேயாஸ் ஐயர் பிடித்துவிட்டார்.

ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு சரியான நான்காம் வரிசை வீரரை தேடிவந்த இந்திய அணிக்கு வரப்பிரசாதமாக கிடைத்தார் ஷ்ரேயாஸ் ஐயர். ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது டி20 அணியிலும் நான்காமிடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார் ஷ்ரேயாஸ் ஐயர்.

மளமளவென விக்கெட்டுகளை இழந்து, அணி தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், நிதானமாக மிடில் ஓவர்களில் சிங்கிள் எடுத்து ஆடும் ஷ்ரேயாஸ் ஐயர், பெரிய ஷாட்டுகளையும் அசால்ட்டாக அடித்து ஸ்கோரை மளமளவென உயர்த்துகிறார். அனைத்து விதமான ஷாட்டுகளையும், எல்லா சூழலுக்கு ஏற்பவும் ஆடும் திறன் பெற்றவராக திகழ்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 டி20 போட்டிகளிலும் அபாரமாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இந்த 2 வெற்றிகளிலுமே ஷ்ரேயாஸ் ஐயரின் பங்களிப்பு அளப்பரியது. முதல் போட்டியில் 204 ரன்கள் என்ற இலக்கை விரட்டும்போது, கோலியும் ராகுலும் இணைந்து அதிரடியான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். அவர்கள் ஆட்டமிழந்ததும் அவர்கள் விட்டுச்சென்ற பணியை செவ்வனே செய்து முடித்தார் ஷ்ரேயாஸ் ஐயர். களத்திற்கு வந்ததும் சற்று நிதானமாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், கொஞ்ச நேரம் கழித்து பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 29 பந்தில் 58 ரன்கள் அடித்ததுடன், சிக்ஸர் விளாசி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார். 204 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரிலேயே அடித்து அபார வெற்றி பெற செய்தார்.

இதையடுத்து அதே ஆக்லாந்து மைதானத்தில் நடந்த 2வது டி20 போட்டியில் 133 என்ற எளிய இலக்கை இந்திய அணி விரட்டியது. ரோஹித்தும் கோலியும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்துவிட்ட நிலையில், ராகுலுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர். அதன்பின்னர் விக்கெட் இழந்துவிடாமல் கவனமாக ஆடியதுடன் பார்ட்னர்ஷிப் அமைந்த பின்னர், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்தில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 44 ரன்களை குவித்து, அணியின் வெற்றிக்கு வெறும் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார்.

இவ்வாறாக சேஸிங்கில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு, அனைவரையும் கவர்ந்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். முதல் போட்டியில் 204 ரன்கள் என்ற இலக்கை ஷ்ரேயாஸ் ஐயர் விரட்டிய விதத்தை பார்த்து வியந்துபோன சேவாக், ஷ்ரேயாஸ் ஐயரை வெகுவாக புகழ்ந்ததோடு பாராட்டியும் இருந்தார். 204 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் வித்தை அனைவருக்கும் தெரியாது. அந்தவகையில் ஷ்ரேயாஸ் ஐயர் மிகத்திறமையானவர் என்றும் அவருக்கு சல்யூட் என்றும் சேவாக் புகழ்ந்திருந்தார்.

இந்நிலையில், இலக்கை விரட்டுவது குறித்து பேசியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், அந்த விஷயத்தில் விராட் கோலி தான் தனது முன்னோடி என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், எந்த ஸ்கோரை நாம் விரட்டுகிறோம், தேவைப்படும் ரன்ரேட் என்ன என்பதற்கேற்ப தெளிவாக திட்டமிட்டு ஆடினால் இலக்கை எளிதாக விரட்டமுடியும் என்று நம்புபவன் நான். இதற்கு விராட் கோலி தான் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவர் களத்திற்கு செல்லும்போது, இதுகுறித்த தெளிவான திட்டங்களுடன் தான் செல்வார். அவரது திட்டத்தை களத்தில் சிறப்பாக செயல்படுத்துவார். அவர் இலக்கை விரட்டும் விதமே மிகச்சிறந்த பாடம். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்றார்.

Mohamed:

This website uses cookies.