ரபாடாவிற்கு பதிலாக டெல்லி அணியில் இணைகிறார் லியாம் பன்கட்
காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ள ரபாடாவிற்கு பதிலாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லியாம் பன்கட் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஒவ்வொரு ரசிகரும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த வருடத்திற்கான தொடர் இன்று மாலை துவங்குகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலத்தில் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் ரபாடாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது, ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட காயம் காரணமாக ரபாடா அடுத்த மூன்று மாதங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக ரபடா ஐ.பி.எல் தொடரில் இருந்தும் விலகினார். ரபாடா விலகியது டெல்லி அணிக்கு பெரும் பின்னடவாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ரபாடாவிற்கு பதிலாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லியாம் பன்கட் டெல்லி டெர்வில்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, லியாம் பங்கட்டை டெல்லி அணிக்கு வரவேற்பதாக பதிவிட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லியாம் பங்கட் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளிலும், 65 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டி.20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் லியாம் பங்கட் பங்கேற்பது இதுவே முதன் முறையாகும்.