இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு யார் யார் விண்ணப்பித்துள்ளார் என்பதை நாம் இங்கு காண்போம்.
உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. ஆனால், உடனடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், மேலும் 45 நாட்களுக்கு தற்போதிருக்கும் பயிற்சியாளர்களின் பதவிக்காலத்தை பிசிசிஐ நீட்டித்தது.
இந்த இடைப்பட்ட நாட்களில் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முடிவு செய்து, இந்த பதவிகளுக்கு வர விரும்புவோர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பினை பிசிசிஐ வெளியிடப்பட்டன. இதற்காக, பலரும் இப்பதவிகளுக்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தனர். ஜூலை 30ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கும் கடைசி நாள் முடிந்ததால், யார் யார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்கள் என்கிற பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள்:
- கேரி கிறிஸ்டன் – தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கேரி கிறிஸ்டன், 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர். இவர் தற்போது மீண்டும் பதவிக்கு வர விண்ணப்பித்துள்ளார்.
- மகேளா ஜெயவர்தனே– இலங்கையைச் சேர்ந்த இவர், கடந்த 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவுடன் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு பயிற்சியாளராகவும், இங்கிலாந்தின் பேட்டிங் ஆலோசகராவும் பணிபுரிந்துள்ளார். தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
- மைக் ஹேசன் – நியூசிலாந்தை சேர்ந்த இவர், நியூசிலாந்து அணிக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்துள்ளார். மேலும் அர்ஜென்டினா மற்றும் கென்யா இரு அணிகளுக்கும் பயிற்சியாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். இவரும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
- டாம் மூடி – ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வந்தார். தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வர விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கிறார்.
- ராபின் சிங் – இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் கோச் ஆன ராபின் சிங், இந்தியாவில் அனுபவம் மிக்க பயிற்சியாளர்களில் ஒருவர். மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் போன்ற அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்திருக்கிறார். இவரும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
- லால் சந்த் ராஜ்புட் – 2007-ம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் அணி மேலாளராக லால் சந்த் இருந்துள்ளார். தற்போது ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் இவர் அங்கிருந்து விலகி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து அதற்கு பிசிசிஐ இடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.
இவர்கள் தவிர, தற்போது பதவியில் இருக்கும் ரவிசாஸ்திரி மீண்டும் இப்பதவிக்கு வர விரும்பினால், முதல் இரண்டு சுற்றுகள் இல்லாமல் நேரடியாக இறுதிச்சுற்றில் பங்கேற்கலாம். அதில் தேர்வாகும் பட்சத்தில் இவரே மீண்டும் இப்பகுதியில் தொடர்வார் என்பதையும் பிசிசிஐ தெரிவித்தது.