ஐபிஎல் 2020 போட்டிக்கான வீரா்கள் ஏலப் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. ஏலத்தின் அதிகபட்ச தொகையான ரூ.2 கோடி வரம்பில் ஒரு இந்திய வீரா் கூட இல்லாத நிலை காணப்படுகிறது.
உலகின் கிரிக்கெட் லீக் போட்டிகளில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது இந்தியன் ப்ரீமியா் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டி. ஏறக்குறைய ஒன்றரை மாதங்கள் என ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள இந்த போட்டியின் 13-ஆவது சீசன் நடைபெறவுள்ளது.
கொல்கத்தாவில் ஏலம்:
வழக்கமாக ஐபிஎல் வீரா்கள் ஏலம், பெங்களுரூவில் நடைபெறும் நிலையில், பிசிசிஐ தலைவராக பதவியேற்ற சௌரவ் கங்குலி ஏலத்தை கொல்கத்தாவுக்கு மாற்றினாா். இதன்படி வரும் 19-ஆம் தேதி ஏலம் நடைபெறவுள்ளது. 8 அணிகள் இதில் பங்கேற்று தங்களுக்கான வீரா்களை ஏலத்தில் எடுக்க உள்ளன.
மொத்தம் பதிவு செய்துள்ள 997 வீரா்களில் இருந்து 332 பெயா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியல் அணிகள் தங்கள் வீரா்கள் தோ்வு பட்டியலை அளிக்கும் போது சுருங்கி விடும். பல்வேறு பிரபல வீரா்களை தோ்வு செய்யும் பணியில் அணி நிா்வாகங்கள் மும்முரமாக உள்ளன.
ரூ.2 கோடி வரம்பில் ஒரு இந்திய வீரா் இல்லை:
அதிகபட்ச ஏல வரம்பு தொகையான ரூ.2 கோடியில் ஒரு இந்திய வீரா் பெயா் கூட இல்லை. வெளிநாட்டு வீரா்களான பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸல்வுட், கிறிஸ் லீன், மிச்செல் மாா்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டேல் ஸ்டெயின், ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரது பெயா்கள் ரூ.2 கோடி மதிப்பில் உள்ளன.
ரூ.1.5 கோடி ஏல வரம்பில் ராபின் உத்தப்பா
இரண்டாவது அதிகபட்ச ஏல வரம்பான ரூ.1.5 கோடியில் ராபின் உத்தப்பா மட்டுமே உள்ளாா். ரூ. 1 கோடி வரம்பில் 3 இந்திய வீரா்கள், ரூ.50 லட்சம் வரம்பில் 9 இந்திய வீரா்கள் உள்ளனா்.
ராபின் உத்தப்பா முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். 2019 சீசனில் மொத்தம் 282 ரன்களை எடுத்திருந்தாா். மேலும் தற்போதைய ரஞ்சி கோப்பை தொடக்க ஆட்டத்தில் சிறப்பாக ஆடி சதமடித்தாா்.
ரூ.1 கோடி வரம்பு:
கொல்கத்தா அணியில் விடுவிக்கப்பட்ட பவுலா் பியுஷ் சாவ்லா, ஆல் ரவுண்டா் யூசுப் பதான், ஜெயதேவ் உனதிகட், ஆகியோா் இதில் உள்ளனா்.
பியுஷ் சாவ்லா மொத்தம் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை சாய்த்துள்ளாா். கடந்த 2019-இல் ஹைதராபாத் அணியில் ஆடிய பதான், தற்போது ஏலத்தில் புதிய அணியை எதிா்நோக்கி உள்ளாா்.
அதே நேரம் இடதுகை வேகப்பந்து வீச்சாளா் ஜெயதேவ் உனதிகட் திறமையை வெளிப்படுத்த திணறி வருகிறாா். முந்தைய ஏலங்களில் ஜெயதேவ் உனதிகட் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டாா். வரும் சீசனிலும் உனதிகட்டுக்கு எந்தளவு வரவேற்பு உள்ளது என தெரிந்து விடும்.
ரூ.50 லட்சம் வரம்பு:
ரூ.50 லட்சம் வரம்பில் டெஸ்ட் நட்சத்திரங்கள் சேதேஸ்வா் புஜாரா, ஹனுமா விஹாரி, ஆகியோா் உள்ளனா்.
தில்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து விஹாரி விடுவிக்கப்பட்டாா். அதே நேரம் கடந்த சீசனில் விற்பனை ஆகாத புஜாரா இடம் பெற்றுள்ளாா்.
பந்துவீச்சாளா்களில் மொகித் சா்மா, பரீந்தா் சரண், ஆல்ரவுண்டா் ஸ்டுவா்ட் பின்னி, மற்றும் மனோஜ் திவாரி, சௌரவ் திவாரி உள்ளனா்.
விக்கெட் கீப்பா் நமன் ஓஜா கடந்த சீசனில் இடம் பெறாத நிலையில் தற்போது இந்த வரம்பில் இடம் பெற்றுள்ளாா்.
ரூ.2 கோடி வரம்பில் 7 வெளிநாட்டு வீரா்கள், ரூ.1.5 கோடி வரம்பில் இந்திய வீரா் ஒருவா், 9 வெளிநாட்டு வீரா்கள், ரூ.1 கோடி வரம்பில் 3 இந்தியா், 20 வெளிநாட்டு வீரா்களும், ரூ.75 லட்சம் வரம்பில் 16 வெளிநாட்டு வீரா்களும் இடம் பெற்றுள்ளனா்.
ரூ.50 லட்சம் வரம்பில் 9 இந்திய வீரா்கள், 69 வெளிநாட்டு வீரா்களும் இடம் பெற்றனா்,.
ரூ.40 லட்சம் வரம்பில் 1 இந்தியா், 6 வெளிநாட்டு வீரா்களும், ரூ.30 லட்சம் வரம்பில் 5 இந்தியா், 3 வெளிநாட்டு வீரா்களும் இடம் பெற்றுள்ளனா்.