2010-2019 வரை 10 ஆண்டுகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் மற்றும் விராட்கோலி இருவரும் தான் டாப்பில் உள்ளனர்.
2010 முதல் 2019ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்கு மிக சிறந்த தசாப்தமாக அமைந்தது. குறிப்பாக, 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை வென்றது, மறக்கமுடியாத நிகழ்வுகளில் முதன்மையானதாக இருக்கும்.
அடுத்ததாக, கிரிக்கெட் உலகின் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் அனைத்துவித போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்ற தருணம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும், கீழ் வரிசையில் சொதப்பி வந்த ரோகித் சர்மாவை அன்றைய கேப்டன் எம்எஸ் தோனி துவக்க வீரராக மாற்றிய தருணம், இந்திய கிரிக்கெட்டை வேறொரு பாதைக்கு எடுத்து சென்றது.
அதேபோல, அண்டர் 19 உலகக்கோப்பையில் அபாரமாக செயல்பட்டு சீனியர் அணிக்கு வந்து சச்சினின் சாதனைகளை தகர்த்து வரும் கேப்டன் விராட்கோலி, குறுகியகாலத்தில் மூன்றுவித போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக உருவெடுத்து தொடர் வெற்றிகளை குவித்து வருவது, அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
ரோகித் மற்றும் விராட்கோலி இருவரும் இந்த தசாப்தத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
விராட்கோலி ஒருநாள் அரங்கில் இதுவரை 43 சதங்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா 28 சதங்களை அடித்துள்ளார். இருவரும் இந்திய அணிக்கு தூணாக இருக்கின்றனர்.
இந்த தசாப்தத்தில், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:
- விராட்கோலி – 11125 ரன்கள்
- ரோகித் சர்மா – 8249 ரன்கள்
- ஹாசிம் அம்லா – 7265 ரன்கள்
- ஏபி டி வில்லியர்ஸ் – 6485 ரன்கள்
- ராஸ் டெய்லர் – 6428 ரன்கள்