கொல்கத்தா அணியில் இருந்து கழண்டுகொண்ட மீண்டும் ஒரு முக்கிய தலக்கட்டு!!

கொல்கத்தா அணியில் இருந்து மீண்டும் ஒரு முக்கிய நபர் தற்போது வெளியேறியுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து முக்கிய பொறுப்பில் இருந்து வரும் சிலர் தற்போது விலகியுள்ளனர். மேலும் சிலர் அணி நிர்வாகத்தினால் நீக்கப்பட்டும் வருகின்றனர். கடந்த ஐபிஎல் தொடரில் (2019) கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. தொடரின் நடுவே, அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தனது பேச்சை வீரர்கள் கேட்பது இல்லை என பகிரங்கமாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதேபோல் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், அணியில் முடிவெடுப்பதில் பல குழப்பங்கள் நிலவி வருகிறது என கூறினார். தொடர்ந்து வீரர்களிடையே முன்னுக்குப்பின் முரணாகவே நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் அணியில் சில மாற்றங்களை கொண்டுவர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் முடிவு செய்து, தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ஜாக்குவஸ் காலிசை நீக்கியுள்ளது. மேலும் துணை பயிற்சியாளர் சைமன் காட்டிச் நீக்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு சக வீரராக ஆட வைக்க அணி நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஆரம்பித்த காலத்தில் இருந்து கொல்கத்தா அணிக்கு உடற்பயிற்சி நிபுணராக இருந்து வந்த ஆண்ட்ரூ லைபேஸ், 12 வருடங்கள் கழித்து அணியில் இருந்து விலகிக்கொள்வதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “12 வருடங்கள் சென்றதே எனக்கு தெரியவில்லை. எனது பயணத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். எனக்கு உதவிகரமாக இருந்த சில பயிற்சியாளர்கள், வீரர்கள், அணி நிர்வாகிகள், இன்னபிற பணியாளர்கள் எனக்கு பலவிதத்தில் உதவியிருக்கின்றனர். அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி கூறிக் கொள்ள விரும்புகிறேன். மேலும் கொல்கத்தா அணியில் இருந்து நான் எடுத்துச் செல்லும் நினைவுகள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தும்” என்றார்

Prabhu Soundar:

This website uses cookies.