ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் லுங்கி நிகிடி.
தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ப்ளோயம்போன்டீனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி வார்னர், ஸ்மித், லபுஸ்சேன் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த மூன்று விக்கெட்டுகள் மூலம் 26 ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் லாங்வாப்போ 27 போட்டிகளிலும், இம்ரான் தாஹிர் 28 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பகல் இரவாக ஆட்டமாக நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவரில் 271 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. கேப்டன் ஆரோன் பிஞ்ச், டி’ஆர்கி ஷார்ட் தலா 69 ரன்னும், மிட்சேல் மார்ஷ் 36 ரன்னும், வார்னர் 35 ரன்னும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் லுங்கி நிகிடி 58 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். நோட்ஜே 2 விக்கெட்டும் ஷம்சி, பெலுக்வாயோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 274 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
புதுமுக வீரர் ஜேன்மேன் மாலன் அபாரமாக விளையாடி தனது 2-வது போட்டியில் சதம் அடித்தார். அவர் 139 பந்துகளில் 129 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். கிளாசன் 51 ரன்னும், மில்லர் 37 ரன்னும் எடுத்தனர். ஆடம் ஜம்பா 2 விக்கெட் டும் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த வெற்றியால் தென்ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அந்த அணி ஏற்கனவே முதல் ஆட்டத்தில் 74 ரன்னில் வென்று இருந்தது. தென் ஆப்பிரிக்கா ஒரு ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.
20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஆட்டம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.