இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு யார் வரப்போகிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
இந்தியன் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ரவிசாஸ்திரியின் பணி காலம் உலக கோப்பையுடன் முடிவடைந்து விட்டது. உலகக்கோப்பையை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் உடனடியாக வருவதால் மேலும் 45 நாட்கள் ரவி சாஸ்திரியின் பணிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் ஆகிய பதவிகளுக்கு வர விரும்புவோர் விண்ணப்பம் மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். கபில்தேவ் தலைமையிலான குழு கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.
இப்பதவிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூலை 30-ஆம் தேதி என்பதையும் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிருஷ்ணன் தற்போது விண்ணப்பித்துள்ளார். மேலும், இலங்கை அணியின் முன்னாள் வீரர் மகிளா ஜெயவர்தனே மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரும் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மகிளா ஜெயவர்தனே வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015 ஆம் ஆண்டு தனது பயிற்சியாளர் பணியை துவங்கிய ஜெயவர்தனே, இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் தலைமையில் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. பயிற்சியாளர் பதவியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இவருக்கு இப்பதவி கிடைப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.
பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு இந்தியாவின் மூத்த பயிற்சியாளர்களுள் ஒருவரான கர்நாடகாவைச் சேர்ந்த ஜே அருண்குமார் விண்ணப்பித்துள்ளார். இவருக்கும் இப்பதவி கிடைப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.
எனினும், கபில்தேவ் தலைமையிலான குழு ஆலோசித்து எடுக்கும் முடிவே இறுதியானது. ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் இப்பதவிக்கு யாருக்கு என்பது வெளியிடப்படும் என தெரிகிறது.