மிடில் ஆர்டரில் ஆர்சிபி அணியை காப்பற்றிய லோம்ரோர்… மீண்டும் கலக்கிய விராட் கோலி… ஆர்சிபி 181 ரன்கள் குவிப்பு!

மஹிப்பால் லோம்ரோர், விராட் கோலி அசத்தல் பேட்டிங்கால் டெல்லி அணிகெதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது ஆர்சிபி அணி.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டு பிளசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கினார்.

விராட் கோலி மற்றும் பாப் டு பிளசிஸ் இருவரும் ஓப்பனிங் இறங்கி மீண்டும் ஒருமுறை ஆர்சிபி அணிக்கு மிகச்சிறந்த துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 82 ரன்கள் சேர்த்திருந்தது.

போட்டியின் 11ஆவது ஓவரை மிட்ச்சல் மார்ஷ் வீசினார். 32 பந்துகளில் 45 ரன்கள் அடித்திருந்த பாப் டூ பிளசிஸ் விக்கெட்டை தூக்கினார். அதற்கு அடுத்த பந்தே மேக்ஸ்வெல் விக்கெட்டை தூக்க, நன்றாக சென்றுகொண்டிருந்த ஆர்சிபி அணி சற்று தடுமாற்றம் கண்டது. அதன்பிறகு ரன் குவிக்கும் வேகம் குறைந்தது.

 

 

அடுத்ததாக மஹிபால் லோம்ரோர் உள்ளே வந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த விராட் கோலி அரைசதம் கடந்தார். விராட் கோலி-லோம்ரோர் ஜோடி 3ஆவது விக்கெட்டிற்கு 55 ரன்கள் சேர்ந்தது. விராட் கோலி 46 பந்துகளில் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் 11 ரன்கள் மட்டுமே அடித்து அவுட் ஆனார். பின்னர் அனுஜ் ராவத் ஒரு பக்கம் விக்கெட் விடாமல் பார்த்துக்கொள்ள, மஹிபால் லோம்ரோர் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விளாசி கடைசி சில ஓவர்களில் ஆர்சிபி அணிக்கு ரன்குவித்து கொடுத்தார்.

லோம்ரோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல், 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் உட்பட 54 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 181 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.

டெல்லி அணிக்கு நன்றாக பவுலிங் செய்த மிட்ச்சல் மார்ஷ், 3 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கியமான விக்கெட்டுகளை தூக்கினார்.

Mohamed:

This website uses cookies.