உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி நாளை மான்ஸ்செஸ்டர் மைதானத்தில் நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி என்பதால் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில தினங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டன.
இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனால் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியில் நாளை இந்தியா அணி வெற்றிபெற வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சர்பிரஸ் அகமதுவின் தாய்மாமா விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் சர்பிரஸ் அகமதுவின் தாய்மாமாவான மஹ்மூத் ஹஸன் என்பவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எட்டவா நகரில் வாழ்ந்து வருகிறார்.
நாளைய போட்டி எப்படி அமையும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று பதிலளித்த அவர், ’நாளை இந்தியா வெற்றிபெற வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அதேவேளையில், என்னுடைய மருமகன் சர்பிரஸ் அகமதுவும் நன்றாக விளையாடி பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஞாயிறன்று இந்த ஆட்டம் என்றால், வெள்ளியன்று மான்செஸ்டரில் நல்ல மழை பெய்துள்ளது. பிட்ச் முழுதும் கவர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மழை விட்ட பிறகு பளீர் சூரிய வெளிச்சம் மைதானத்தை நனைத்தது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் லண்டன் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள இந்திய-பாக் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.
ஆனால் ஞாயிறு மதியம் சிறிய அளவில் மழை பெய்யலாம் என்று வானிலை முன்னறிவுப்பு கூறுகிறது. இதனால் ஆட்டம் சற்று பாதிப்படையலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கிலாந்தின் வானிலையை குறிப்பாக கோடைக் காலங்களில் கணிப்பது கடினம் என்று வானிலை நிபுணர்கள் கருதுவதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்குவெதர் என்ற வானிலை முன்னறிவுப்பு இணையதளம் ஓல்ட் ட்ராபர்ட் நேரம் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை மழை பெய்யும் என்று கணித்துள்ளது. மேலும் நாள் முழுதும் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் வெப்ப அளவு நாள் முழுதும் 17 டிகிரி செல்சியஸ் அளவு இருக்கும் என்றும் அக்குவெதர் கூறுகிறது.
மேலும் மே 22ம் தேதி லங்காஷயர், வொர்ஸ்டர்ஷயர் உள்ளூர் போட்டிக்குப் பிறகு ஓல்ட் ட்ராபர்டில் எந்த போட்டியும் நடைபெறவில்லை என்பதும் இந்திய-பாகிஸ்தான் போட்டியின் வானிலை குறித்த ஐயங்களை எழுப்பியுள்ளது.
இது போக, கடந்த வாரத்தில் தினமுமே ஓல்ட் ட்ராபர்டில் மழை பெய்துள்ளது. அதனால் பிட்ச் கவருக்கு அடியில்தான் இருந்து வருகிறது. ஆகவே நாளை ஸ்விங் பவுலர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
ஐசிசியை இந்த மழைக்காக அனைவரும் விமர்சிக்க ஐசிசி-யோ சீசனல்லாத வானிலை எதிர்பாராதது என்று வானிலையைக் கைகாட்டியுள்ளது.
எனவே நாளை இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் மட்டுமல்லாது, ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள், போட்டியை நடத்தும் ஐசிசி என்று அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.வ்