மாட்டுச்சாணி’தான் எனக்கு பவர் பேங்க் – மகயா நிடினி

ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போது, கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஸ்போர்ட்ஸ் கிட் உடன் எடுத்துச் செல்வார்கள், சிலர் தங்களின் மனைவியை உடன் அழைத்துச் செல்வார்கள் என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால், ஒரு கிரிக்கெட் வீரர் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின்போதும், தன்னுடன் மாட்டுச் சாணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவருக்கு நேற்று 41-வது பிறந்த நாளாகும். தென் ஆப்பிரிக்க நேரப்படி இன்றுதான் அவருக்குப் பிறந்த நாள்.

அவர் வேறுயாருமல்ல, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முதல் கறுப்பினவீரர் மகாயா நிடினி.

வேகப்பந்துவீச்சாளரான நிடினி கேப்டவுன் மாநிலத்தில் கிங் வில்லியம்ஸ் நகரில் கடந்த 1977-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி பிறந்தவர். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவரான நிடினி, சிறுவயதில் செருப்பு, ஷூ வாங்குவதற்குக் கூட பணமில்லாமல் இருந்தார். சிறுவயதில் மாடு மேய்த்துதான் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றியுள்ளார். அதன்பின் நண்பர்கள் உதவியாலும், முயற்சியாலும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி, தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்றார்.

கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி பெர்த்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நிடினி தென் ஆப்பிரிக்க அணிக்காக அறிமுகமானார். 173 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிடினி 390 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 10 டி20 போட்டிகளில் பங்கேற்று 6 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியோடு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து நிடினி ஓய்வு அறிவித்தார்.

41-வயதான நிடினிக்கு நேற்று பிறந்த நாள். ஒவ்வொரு வீரருக்கும் குறிப்பிட்ட பொருட்கள் அதிர்ஷ்டம் தருவதாக அமையும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக் எப்போதும் தன்னுடன் சிவப்பு நிற கைக்குட்டை வைத்திருப்பார், இலங்கை வீரர் ஜெயசூர்யா பேட்டிங் செய்வதற்கு முன் ஒவ்வொரு பொருட்களையும் கை கிளவுஸ், பேட் என அனைத்தையும் முத்தமிடுவார், மலிலங்கா பந்தை முத்தமிடுவார், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஸ்டீவ் ஸ்மித் பேட் செய்யும்முன் தனது ஷூ லேஸை கட்டுவார். இது ஒவ்வொரு வீரரின் நம்பிக்கையாகும்.

அதேபோல, தென் ஆப்பிரிக்க வீரர் நிடினிக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அது சிறிது வித்தியாசமானது. தான் எந்த நாட்டுக்கு விளையாடச் சென்றாலும், தன்னுடன் ஒரு பிளாஸ்டிக் பையில் மாட்டுச் சாணத்தை எடுத்துச் செல்வது அவரின் பழக்கம்.

இது குறித்து நிடினி ஒரு பேட்டியில் கூறுகையில், ”மிகச்சிறிய கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். காலில் செருப்பு, ஷூ வாங்குவதற்குக் கூட எனக்கு வசதி இல்லை. இதனால், காலைநேரத்தில் பனிக்காலத்தில் வெளியே செல்லும்போது, மாடு சாணமிட்டுள்ள இடத்தில் அதன் மீது காலை வைத்துச் செல்வேன். அப்போதுதான் அதன் கதகதப்பு எனக்குச் செருப்புபோல் இருக்கும். காலில் ஷூ இல்லாத காரணத்தால் இப்படித்தான் செய்தேன்.

அதுமட்டுமல்லாமல், நான் தென் ஆப்பிரிக்க அணிக்கு வந்தபின், எந்த நாட்டுக்குச் சுற்றுப்பயணம் சென்றாலும், என்னுடன் ஒரு பிளாஸ்டிக் பையில் மாட்டுச் சாணத்தை உடன் எடுத்துச் செல்வேன். என்னுடைய அதிர்ஷ்டமாக நான் மாட்டுச் சாணத்தைக் கருதினேன். எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், களத்தில் நன்றாகப் பந்துவீச முடியாவிட்டால், ஓய்வு அறைக்குச் சென்று நான் வைத்திருக்கும் மாட்டுச் சாணத்தை முத்தமிட்டு, முகர்ந்து பார்த்துக்கொள்வேன். அதன்பின் என்னுடைய விளையாட்டில் உற்சாகமும், அதிகமான விக்கெட்டுகளையும் வீழ்த்துவேன். எனக்கு இது மிகவும் அதிர்ஷ்டமாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல் பயிற்சியின் போது என்னால் சரியாக செயல்படமுடியாவிட்டால், ஓய்வு அறைக்குச் சென்று எனது பையில் இருக்கும் சாணத்தை சிறிது எடுத்து முகத்தில் தேய்த்துக்கொள்வேன். அதன்பின் எனக்கு அது உத்வேகத்தை அளிக்கும்” என நிடினி தெரிவித்திருந்தார்.

Editor:

This website uses cookies.