கிரிக்கெட் ஆட்டத்தில் வழக்கத்துக்கு மாறான பந்து வீச்சு முறை கொண்டவர்கள் எப்போதும் ரசிகர்களை மைதானத்துக்கு ஈர்ப்பவர்கள்.
மே.இ.தீவுகளின் கார்னர், காலின் கிராப்ட் முதல் மலிங்கா தற்போது நம் பும்ரா வரை விநோதமான ஆக்சனில் பந்து வீசுபவர்களைப் பார்க்க ஆர்வம் எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகம், ஸ்பின்னில் பால் ஆடம்ஸ் ஒரு எடுத்துக்காட்டு, இன்னும் எவ்வளவோ பவுலர்கள் மைய நீரோட்டத்துக்கு வராமலேயே திறமையான பவுலர்களாகவும் வழக்கத்துக்கு மாறான சுவாரசியமான ஆக்ஷனையும் உடையவர்களாக இருக்கின்றனர்.
அந்த வகையில் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்டில் ஆல்பர்ட் டூட்டி பேட்ரியட்ஸ் அணிக்கு ஆடிய அதிசயராஜ் டேவிட்சன் பந்து வீச்சு முறை அப்படியே இலங்கையின் பாதம் பெயர்க்கும் யார்க்கர் பவுலர் லஷித் மலிங்காவின் ஆக்ஷனை நகல் எடுத்தது போல் உள்ளது.
இவரும் பாதம் பெயர்க்கும் யார்க்கர்களை வீசக்கூடிய திறமை படைத்தவர்.
முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது அதிகாரபூர்வ சமூகவலைத்தளத்தில் அதிசயராஜ் டேவிட்சனின் பாதம் பெயர்க்கும் யார்க்கர் பந்து ஒன்றின் வீடியோவை வெளியிட்டு அதற்கு ‘மீட் த இந்தியன் லஷித் மலிங்கா’ என்று தலைப்பிட்டுள்ளார்.
25 வயதான அதிசயராஜ் டேவிட்சன் தற்போது சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டில் ஆடிவருகிறார். டிஎன்பிஎல் டி20-யில் அதிசயராஜ் டேவிட்சன் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தற்போது தெற்கு மண்டல அணிக்காக 5 டி20 போட்டிகளில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்,
பெரிய கிரிக்கெட்டில் நுழைந்து கலக்கும் திறமை இவரிடத்தில் இருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.