இலங்கை அணியின் புதிய கேப்டனாக லசீத் மலிங்கா நியமனம்
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி.20 தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக அந்த அணியின் சீனியர் வீரர் லசீத் மலிங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி.20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், டெஸ்ட் தொடருக்கு பிறகு நடைபெற இருக்கும் ஒருநாள் மற்றும் டி.20 தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஒவ்வொரு தொடருக்கும் ஒரு கேப்டன் என்று சொல்லும் அளவிற்கு கேப்டனை மாற்றி கொண்டே இருக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம், தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி.20 தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவை நியமித்துள்ளது.
மலிங்கா தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் அணியின் துணை கேப்டனாக நிரோசன் டிக்வெல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஆங்கிலோ மேத்யூஸ் தனுஷ்கா குணதிலகே குஷால் பெரேரா, தினேஷ் சண்டிமால், ஆசிலே குணரத்னே, டி சில்வா, திஷாரா பெரேரா ஆகிய நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களை தவிர தசுன் சனகா, லக்ஷன் சண்டாகன், சீகுஜே பிரசன்னா, துஸ்மந்தா சமீரா, கசுல் ரஜிதா, நுவன் பிரதீப் மற்றும் லஹிரூ குமாரா ஆகியோரும் நியூசிலாந்து அணியுடனான தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி.20 தொடருக்கான இலங்கை அணி;
லசீத் மலிங்கா (கேப்டன்) நிரோசன் டிக்வெல்லா, ஆங்கிலோ மெத்யூஸ், தனுஷ்கா குணதிலகே, குஷால் பெரேரா, தினேஷ் சண்டிமால், அசிலா குணரத்னே, குஷால் மெண்டிஸ், தனன்ஞனேயே டி சில்வா, திஷாரா பெரேரா, தசுன் சனாகா, லக்ஷன் சண்டாகன், சீகுஜே பிரசன்னா, துஸ்மந்தா சமீரா, கசுன் ரஜிதா, நுவன் பிரதீப், லஹிரு குமாரா.