மீண்டும் ரன்கள் குவித்து என்னுடைய இந்திய அணியின் இடத்தை பிடிப்பேன் என இந்தியாவின் இளம் ஆக்ரோஷ வீரர் மனிஷ் பாண்டே தெரிவித்துள்ளார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில், மணீஷ் பாண்டே மீண்டும் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில், கடந்த சில வருடங்களாக, ’நான்காவது வரிசை’ பஞ்சாயத்து பாடாய்ப்படுத்தி வருகிறது. அந்த இடத்துக்கு பல வீரர்களை மாற்றி மாற்றிப் பார்த்தும் யாரும் செட்டாகவில்லை. அம்பத்தி ராயுடு சிறப்பாக பொருந்தியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், மோசமான ஃபார்ம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. கே.எல்.ராகுல் அந்த இடத்துக்கு வந்தார். ஷிகர் தவான் காயமடைந்ததால், உலகக் கோப்பைத் தொடரில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். பின்னர் கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட சிலரை பரிசோதித்து பார்த்தும் நிலையான ஆட்டத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை.
அந்த இடத்தில் ஏற்கனவே, கர்நாடகத்தைச் சேர்ந்த மணீஷ் பாண்டே விளையாடி வந்தார். தற்போது இந்திய ஏ அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். அந்த அணியுடனான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அவர் அபார சதமடித்ததால், இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20, மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் 2 டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் ஆகஸ்ட் 3, மற்றும் 4 ஆம் தேதிகளில் நடக்கிறது. கடைசி டி20 போட்டியில் இருந்து மற்ற ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதற்கான அணி தேர்வு இன்று நடக்கிறது. இதில் மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
அதோடு, மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில் ஆகியோரில் சிலருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படு கிறது. சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர், டெல்லி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோரின் பெயர்களும் பரிசீலினை யில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பிசிசிஐ இணையதளத்திற்கு அவர் தெரிவித்ததாவது..
உலக கோப்பை தொடரில் நான் விளையாடவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், கண்டிப்பாக மீண்டும் ரன்களைக் குவித்து இந்தியாவில் மிடில் ஆர்டரில் என்னை இணைத்துக் கொள்வேன். அதற்கேற்றவாறு எனனை தயார்படுத்தி வருகிறேன். நானும் அதற்கு தகுதியானவன் தான். விரைவில் அந்த இடம் பிடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் மனிஷ் பாண்டே.