கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் விலகி உள்ளார்.
இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகள் இடையே 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் முதல் 3 ஆட்டங்களில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் டி வில்லியர்ஸ் இடம் பெற்றிருந்தார். முதல் ஒருநாள் போட்டி டர்பனில் நாளை தொடங்க உள்ள நிலையில் வலது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டிவில்லியர்ஸ் விலகி உள்ளார். சுமார் 2 வார காலம் ஓய்வில் இருக்குமாறு அவருக்கு, மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
இவருக்கு பதுளாக டெஸ்ட் அணியில் ஓப்பனிங் ஆடிய எயிடன் மார்க்ரம் களம் இறங்குவார் என தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டு பிலேசிஸ் கூறியுள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் டர்பன் நகரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றாத இந்தியா, சமீபத்தில் நிறைவடைந்த டெஸ்ட் தொடரையும் 2-1 என இழந்தது. ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதே கனவு தொடரும் நிலையில், இந்தத் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.
அத்துடன், 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆண்டு முழுவதுமாக அதிகளவிலான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது இந்தியா. அந்த வகையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்கள் உலகக் கோப்பை போட்டிக்கான வீரர்கள் தேர்வுக்கு உதவியாக இருக்கும்.
கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஆடிய 28 ஒருநாள் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா 21 வெற்றிகளையும், இந்தியா 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன. எனினும், கடந்த 2016 ஜனவரிக்குப் பிறகு உள்நாடு மற்றும் வெளிநாட்டிலுமாக அனைத்து ஒருநாள் தொடர்களிலும் இந்தியா தோல்வியே காணாதது அணிக்கான பலம்.
தொடர் வெற்றிக் கனவு ஒருபுறம் இருக்க, ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பெறுவதற்கான வாய்ப்பும் இந்தத் தொடரின் மூலம் இந்தியாவுக்கு உள்ளது. 6 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரை 4-2 என இந்தியா வென்றால், முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவை பின்னுக்குத்தள்ளி, இந்திய முதல் அணியாக மாறும்.
அணியைப் பொருத்த வரையில், இலங்கை தொடருக்குப் பிறகு கேப்டன் கோலி அணிக்குத் திரும்புவதால் மிடில் ஆர்டரில் ஒரு இடத்துக்கான போட்டி உள்ளது. அதில் ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே ஆகியோரில் ஒருவர் இடம்பெறலாம். ஆட்டம் நடைபெறும் நாளில் மழைக்கான வாய்ப்பு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரேயொரு சுழற்பந்துவீச்சாளரை இந்தியா களமிறக்க விளையும் பட்சத்தில் குல்தீப் யாதவ், கேதார் ஜாதவ் ஆகியோரில் ஒருவருக்கு வாயப்பளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.