சீனியர் வீரரை மீண்டும் தேடி வந்த அதிர்ஷ்டம்… உலகக்கோப்பை தொடருக்கான கெத்தான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதி செய்யப்பட்ட தனது அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
50 ஓவர் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளில் அடுத்த இரு தினங்களில் துவங்க உள்ள நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான அணிகளில் திருத்தம் செய்து கொள்வதற்காக ஐசிசி., அறிவித்திருந்த அவகாசமும் இன்றோடு (28-9-23) நிறைவடைந்தது. இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தங்களது அணியில் மாற்றம் செய்து கொள்ள விரும்பிய அணிகள், இறுதி செய்யப்பட்ட தங்களது அணிகளை இன்று அறிவித்தன.
அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியும் எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான தொடரில் பேட்டிங் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் மார்னஸ் லபுசேனுக்கு உலகக்கோப்பை தொடருக்கான அணியிலும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மோசமான பேட்டிங்கால் கடுமையான விமர்ச்சனங்களை எதிர்கொண்டு வந்த லபுசேன் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக தனது பார்மிற்கு திரும்பி ஆஸ்திரேலிய அணியிலும் இடம்பிடித்துள்ளார். ஆஸ்டன் ஆகர் காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியதால், அவரது இடம் தான் லபுசேனிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்பா மட்டுமே முழுநேர சுழற்பந்து வீச்சாளராக இடம்பெற்றுள்ளார். உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கும் இந்தியாவின் பெரும்பாலான ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சிற்கே சாதகமாக இருக்கும் என்றாலும், ஆஸ்திரேலிய அணி தனது அணியில் ஆடம் ஜாம்பாவிற்கு மட்டுமே இடம் கொடுத்துள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி;
பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜாஸ் இங்லீஸ், சியன் அபாட், கேமிரான் க்ரீன், ஜாஸ் ஹசில்வுட், டர்வீஸ் ஹெட், மார்னஸ் லபுசேன், மிட்செல் மார்ஸ், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்டார்க்.