தலைகீழா நின்னாலும் இவர மாதிரி ஒரு தரமான பேட்ஸ்மேனை பார்க்க முடியாது; வாசிம் அக்ரம் சொல்கிறார்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலருமான வாசிம் அக்ரம், தான் பந்துவீசியதிலேயே எந்த பேட்ஸ்மேன் மிகவும் கடினமானவர் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் பலரை கிரிக்கெட்டுக்கு கொடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியில் எல்லா காலக்கட்டத்திலுமே சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் இருந்துள்ளனர். அந்தந்த காலக்கட்டத்தில் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் பாகிஸ்தான் அணியிலிருந்து கண்டிப்பாக இருப்பார்.
அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர். நல்ல வேகத்துடன் அருமையாக ஸ்விங்கும் செய்யக்கூடியவர். 1984ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில் ஆடிய வாசிம் அக்ரமும் அவரது ஃபாஸ்ட் பவுலிங் பார்ட்னர் வக்கார் யூனிஸும் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டுள்ளனர்.
வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 414 விக்கெட்டுகளையும் 356 ஒருநாள் போட்டிகளில் ஆடி 502 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் வாசிம் அக்ரம். அவரது காலக்கட்டத்தில் ஆடிய பல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் வாசிம் அக்ரம்.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த வாசிம் அக்ரம், மிகவும் கடினமான கேள்வி. ஆனால் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அது கண்டிப்பாக நியூசிலாந்தின் மார்டின் க்ரோவ் தான். நான் பந்துவீசியதிலேயே மிகவும் கடினமான பேட்ஸ்மேன் அவர் தான். ஏனெனில் அவர் எப்போதுமே ஃப்ரண்ட் ஃபூட்டில் தான் ஆடுவார். அதனால் விரக்தியடைந்த என்னை போன்ற ஃபாஸ்ட் பவுலர்கள் ஷார்ட் லெந்த்தில் பந்தை வீசுவோம். அதுதான் அவருக்கு தேவையானதும் கூட; அடித்து நொறுக்குவார் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
1992 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானும் நியூசிலாந்தும் மோதின. அந்த போட்டியில் மார்டின் க்ரோவ் அபாரமாக ஆடி 83 பந்தில் 91 ரன்களை குவித்தார். ஆனால் அந்த போட்டியில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்று, கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது.