நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான மார்டின் கப்தில் டி.20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
ஸ்காட்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ஸ்காட்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி நேற்று (27ம் தேதி) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பின் ஆலன் 101 ரன்களும், மார்டின் கப்தில் 40 ரன்களும், அதிரடியாக விளையாடிய ஜிம்மி நீஷம் 9 பந்துகளில் 30 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி வீரர்கள், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தநிலையில், இந்த போட்டியின் மூலம் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான மார்டின் கப்தில் டி.20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
மார்டி கப்தில் இந்த போட்டியில் 21 ரன்கள் எடுத்த போது சர்வதேச டி.20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
35 வயதான கப்தில் இதுவரை 116 இருபது ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி 2 சதம், 20 அரைசதம் உள்பட 3,399 ரன்கள் எடுத்துள்ளார். 2-வது, 3-வது இடங்களில் முறையே இந்தியாவின் ரோகித் சர்மா (3,379 ரன்), விராட் கோலி (3,308 ரன்) ஆகியோர் உள்ளனர். விண்டீஸ் அணிக்கு எதிரான எதிர்வரும் டி.20 தொடரில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினால் மீண்டும் முதலிடத்தை பிடிக்கலாம்.