உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து-பங்களாதேஷ் அணிகளும் மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் 12 வது போட்டியில், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. கார்டிஃப் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. நடப்பு தொடரில் இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அடுத்த போட்டியில், பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. பங்களாதேஷ் அணி, தனது முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் போராடி தோற்றது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும்.
பேட்டிங், பந்துவீச்சில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட், அடில் ரஷித் பந்துவீச்சில் மிரட்டுகிறார்.
பங்களாதேஷ் அணியும் திறமையான அணிதான். அந்த அணியில், பேட்டிங்கில் தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். பந்துவீச்சில் முஸ்தபிஷூர் ரகுமான், சைபுதீன், மெஹிடி ஹசன், மோர்டாசா ஆகியோர் மிரட்டுகின்றனர். இருந்தாலும் இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆடுவதால், பங்களாதேஷ் அணிக்கு இன்றைய போட்டி கடும் சவாலாக இருக்கும்.
அணி விவரம்
இங்கிலாந்து: இயன் மோர்கன், ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி, டாம் கரண், லியாம் டாவ்சன், ஆதில் ரஷித், ஜேம்ஸ் வின்ஸ், மார்க் வுட், லியாம் பிளங்கெட்
வங்கதேசம்: மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா, முஸ்பிஹூர் ரகிம், மொசடக் ஹோசைன், மொகமது சைபுதின், ரூபல் ஹோசைன், லிட்டன் தாஸ், அபு ஜெயத், மெஹிதி ஹசன், மொகமது மிதுன், முஸ்பிஹூர் ரஹ்மான், சபிர் ரஹ்மான்.
இங்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.