ஆடம் ஜாம்பா அபாரம்… 90 ரன்களில் ஆல் அவுட்டான நெதர்லாந்து அணி; 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 24வது போட்டியில் நெதர்லாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 104 ரன்களும், கடைசி நேரத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய கிளன் மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 106 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய நெதர்லாந்து அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறினர்.
நெதர்லாந்து அணியின் ஒரு துவக்க வீரரான விக்ரம்ஜித் சிங் 25 ரன்கள் எடுத்ததே நெதர்லாந்து அணி சார்பில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகும். மற்ற வீரர்களில் ஒருவர் கூட 20 ரன்னை தாண்டாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதனால் 21வது ஓவர் முடிவில் வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்த நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிட்செல் மார்ஸ் 2 விக்கெட்டையும், மற்ற பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.