தோனி ஓய்வு முடிவை அறிவித்த பிறகு நானும் அவரும் கட்டிப்பிடித்து அழுதோம் என மனம் திறந்து பேசியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு பிறகு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. நேரடியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சேப்பாக்கம் மைதானம் வந்தடைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.
அடுத்த சில தினங்களிலேயே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடர் தள்ளிச் சென்றுகொண்டே இருந்தது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறலாம் என்ற நோக்கில் இருந்த தோனிக்கு இது பெருத்த பின்னடைவாக இருந்திருக்கும்.
அதன்பிறகு டி20 உலகக்கோப்பை தொடரும் 2022 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டதால் மீண்டும் இந்திய அணியில் தோனி இடம் பெறுவது கடினம் என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்போவதாக பிசிசிஐ தெரிவித்ததையடுத்து அதில் தோனியை மீண்டும் பார்க்கலாம் என்ற சந்தோசத்தில் ரசிகர்கள் இருந்தனர்.
இந்த சந்தோசம் தோனி ரசிகர்களுக்கு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஏனெனில் யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துவிட்டு நகர்ந்தார். தோனி அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்து மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இவர் 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணிக்காக ஆடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒரே நேரத்தில் ரெய்னா மற்றும் தோனி இருவரும் ஓய்வு முடிவை அறிவித்த அதிர்ச்சியில் ரசிகர்கள் இருக்கையில், ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக ஆடி வரும் இருவரும் ஓய்வு முடிவை அறிவித்த பிறகு என்ன செய்திருப்பார்கள் என ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்கு ஆவலாக இருந்தனர்.
இது குறித்து பேசிய ரெய்னா , “இருவரும் ஓய்வை அறிவித்த பிறகு கட்டிப்பிடித்து அழுதோம்.” என மனம் திறந்து பேசியுள்ளார்.