தென்னாப்பிரிக்காவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளராக இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட பெண் இருக்கிறார்.
கிரிக்கெட் விளையாடாமல் கிரிக்கெட் வர்ணனை செய்பவர்களில், இந்தியாவில் ஹர்ஷா போக்ளே முக்கியமானவர். அவரைத் தவிர பெரும்பாலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களே, வர்ணனையாளராக இருக்கிறார்கள். பெண் வர்ணனையாளர்களில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன், மித்தாலி ராஜ் வர்ணனையாளராகக் கலந்துகொள்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளராக இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட கஸ்தூரி நாயுடு என்பவர் இருக்கிறார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வட்டாரத்தில் ’கஸ் நாயுடு’ என்று அறியப்படும் இந்த கஸ்தூரி நாயுடுவின் முன்னோர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து டர்பனுக்கு சென்றவர்கள்.
‘எனது 14 வயதில் தென்னாப்பிரிக்க போட்டி ஒன்றை டோன்னா சைமண்ட்ஸ் வர்ணித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். எனக்கும் அந்த ஆசை வந்தது. பிறகுதான் அதைக் கவனிக்கத் தொடங்கினேன்.
ஸ்கூல் முடிந்ததும் கிங்ஸ்மீட் மைதானத்துக்கு சென்றுவிடுவேன். அங்கு என்ன கிரிக்கெட் போட்டி நடந்தாலும் பார்க்கத் தொடங்கிவிடுவேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன். பிறகு அம்மாவிடம் என் கனவைச் சொன்னேன். இப்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முதல் பெண் வர்ணனையாளராக ஆகியிருக்கிறேன்’ என்கிறார் கஸ்தூரி.
2003-ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக அறிமுகமான கஸ்தூரிக்கு, டேனியல் என்ற 8 வயது மகன் இருக்கிறார். சமீபத்தில்தான் டி வில்லியர்ஸை சந்தித்த டேனியலுக்கு விராத் கோலியை சந்திக்க வேண்டும் என்பது ஆசை!
‘அவனுக்கு இந்தியாவுக்கு வரவேண்டும் என்று ஆசை. அங்குதான் சுழற்பந்து பயிற்சி பெற வேண்டும் என்கிறான். ஐபில் போட்டிகள் அவனை அதிகமாகப் பாதித்திருக்கிறது’ என்கிறார் கஸ்தூரி.