மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றின் இரு பெரும் ஜாம்பவன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி இன்று (21-4-22) நடைபெறுகிறது.
ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் வெறும் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியோ, ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல், ஒவ்வொரு போட்டியிலும் தடுமாறி வருகிறது.
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இரு அணிகள் இடையேயான இந்த போட்டியில் நிச்சயம் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதால், இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. துவக்க வீரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பாவே களமிறங்குவார்கள். ருத்துராஜ் கெய்க்வாட் கடந்த போட்டியை போன்று இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
மிடில் ஆர்டரில் மொய்ன் அலி கடந்த இரண்டு போட்டியிலும் சொதப்பியிருந்தாலும், அவருக்கான வாய்ப்பு மறுக்கப்படாது என்றே தெரிகிறது. மொய்ன் அலியை போன்று அம்பத்தி ராயூடு மற்றும் சிவம் துபே ஆகியோரே மிடில் ஆர்டரில் களமிறங்குவார்கள்.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் வழக்கம் போல் ஜடேஜா மற்றும் டூவைன் பிராவோ ஆகியோரே இடம்பிடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதே வேளையில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் சென்னை அணியை தேடி வந்த வெற்றியை வெறும் ஒரே ஓவரில் அப்படியே திருப்பு அனுப்பி, தோல்விக்கும் காரணமாக அமைந்த கிரிஸ் ஜோர்டன் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டூவைன் ப்ரெட்டோரியஸுக்கு மீண்டும் ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர வேறு மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகிறது. மகேஷ் தீக்ஷன்னா மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோருக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்.
மும்பை அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி, டூவைன் பிராவோ, டூவைன் ப்ரெடோரியஸ், மகேஷ் தீக்ஷன்னா, முகேஷ் சவுத்ரி.