ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் ஸ்லாடர் விமானத்தில் கடும்வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால், அவர் இறக்கிவிடப்பட்டார் விமானமும் 30 நிமிடங்கள் தாமதமாகச் சென்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்குவாரி ஸ்போர்ட்ஸ் ரேடியாவின் நிருபர்கள் நேரில் பார்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் இருந்து வாஹா வாஹா நகருக்கு விமானம் பயணிக்க இருந்தது. அந்த விமானத்தில் ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் பயணித்தார். அப்போது அவருக்கும், மற்ற இரு பெண் பயணிகளுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, விமானத்தில் இருந்த கழிவறைக்கு சென்ற ஸ்லாட்டர் நீண்டநேரமாகியும் வரவில்லை, விமான ஊழியர்கள் ஸ்லாட்டரை வெளியே வரக்கூறியபோதும் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, போலீஸாரை அழைத்து, ஸ்லாட்டரை வெளியே கொண்டுவந்தனர்.
இந்த சம்பவத்தால், விமானம் உரியநேரத்துக்கு புறப்பட முடியாமல் 30 நிமிடங்கள் தாமதமானது. ஆனால், தொடர்ந்து அந்த விமானத்தில் ஸ்லாட்டரை பயணிக்க ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஸ்லாட்டர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்லாட்டர் வர்ணனையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து ஸ்லாட்டர் கூறுகையில், ” நான் எந்த பயணிகளுடன் வாக்குவாதம் செய்யவில்லை. ஆனால், என்னால் விமானப்பயணம் தாமதமாகி இருந்தால், அதற்கு மன்னிப்பு கோருகிறேன்” எனத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய குவான்டிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த சம்பவம் நடந்தது உண்மைதான் என்று தெரிவித்துள்ளநிலையில், கீழே இறக்கிவிடப்பட்ட பயணியின் பெயரை கூற மறுத்துவிட்டது. ஆண் பயணி என்று மட்டும் கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த மைக்கேல் ஸ்லாட்டர் 5,312 ரன்கள் குவித்துள்ளார். 2014-ம் ஆண்டில் ஓய்வை அறிவித்தார்.வ்