இந்த இந்திய அணியால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது; மைக்கெல் வாகன் திட்டவட்டம்
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அன்று மும்பையில் இந்திய அணிக்கு ஒரு கொடூரமான எச்சரிக்கை மணியை ஆஸ்திரேலியா ஒலித்தது.
வீரர்களை பாதுகாக்கும் நோக்குடன் அணித்தேர்வும், அணியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் வீரர்களை பேட்டிங் வரிசையில் தக்க வைப்பதற்காக தன் 3ம் நிலையை விட்டு கோலி கீழிறங்கியதும் தோல்விக்குக் காரணமாக விமர்சகர்களால் முன் வைக்கப்படும் நிலையில் அடுத்ததாக 2023-ல் இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை கிரிகெட்டுக்கான எச்சரிக்கையை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல்வான் வெளியிட்டுள்ளார்.
அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“(முதல் போட்டித் தோல்விக்குப் பிறகு) இந்தியா எப்படி 2வது ஒருநாள் போட்டியில் பதில் அளிக்கப்போகிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறது. அவர்கள் நேர்மையாக இருந்தால் கடைசி 2 உலகக் கோப்பைத் தொடர்களிலும் இந்திய அணி தங்கள் திறமையைவிடக் குறைவாகவே ஆடியது என்பதை ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் மிடில் ஆர்டர் எனும் இன்ஜின் அறையில் ஆற்றல் போதவில்லை. உள்நாட்டு உலகக்கோப்பையை அந்தந்த நாடே வெல்லும் என்ற மரபை காப்பாற்ற இந்திய அணிக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
முதல் போட்டியில் ஷிகர் தவண் அதிகபட்ச ஸ்கோரை எடுத்தாலும் சுமார் 51 பந்துகளை டாட் பால்களாக ரன் இல்லாமல் ஆக்கினார். பவுலிங்கில் ஷமி, பும்ரா இருவரும் ஓவர் பிட்ச் நேர் நேர் தேமா பந்துகளை வீசி வார்னர், பிஞ்ச் ஆகியோரை செட்டில் ஆகவிட்டனர், குல்தீப் யாதவ் பயத்தில் ‘ஆகமெதுவாக’ வீசி வருகிறார்.
இந்தத் தவற்றையெல்லாம் இந்திய அணி இன்று சரி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.