பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வரும் மிக்கி ஆர்துர் பதவிக்காலத்தை வருகிற டி20 உலகக்கோப்பை வரை நீட்டிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை அடுத்து சற்று கடினமான அணியாக பாகிஸ்தான் அணி பார்க்கப்பட்டது. அதேபோல் கணிக்க முடியாது அணியாகவும் பாகிஸ்தான் இருந்து வந்தது.
பாகிஸ்தான் அணி உலக கோப்பை துவக்க போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், அதற்கு அடுத்த போட்டியிலிலேயே தொடரை நடத்தும் நாடான இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து வெற்றியைப் பெற்றது.
இருப்பினும் தொடரின் நடுவே ஒரு சில தோல்விகளை பாகிஸ்தான் அணி தொடர்ந்து சந்தித்து வந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்பட்டு ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.
அரையிறுதியோடு பாகிஸ்தான் அணி வெளியேறியதனால், தேர்வுக்குழுத் தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் தனது பொறுப்பினை ராஜினாமா செய்தார். அதேபோல அணியில் மேலும் சில மாற்றங்களை கொண்டுவர பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
தற்போது தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வரும் மிக்கி ஆர்தரின் பதவிக்காலத்தை சாம்பியன்ஸ் டிராபி வெற்றி, டி20 தரவரிசையில் முதலிடம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை வரை நீட்டிக்கச் செய்யலாம் என்ற முடிவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
எனினும், பாகிஸ்தான் அணியின் உலக கோப்பை செயல்பாடு குறித்து வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி வாரியத்தின் அதிகாரிகள் கூட்டம் நடக்க இருப்பதாகவும் அதில் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் கான் இடம் பெறுவார் என்றும் அவரையும் சேர்த்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பு மற்றும் இரட்டை கேப்டன் பொறுப்பு ஆகியன குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரியவந்துள்ளது.