“அடுத்த தொடரிலும் நான் அணிக்காக ஆடமாட்டேன்” – மூத்த வீரரின் முடிவு! பயிற்சியாளர் கருத்து!
அடுத்த தொடரிலும் நான் ஆட மாட்டேன் என கூறிய மூத்த வீரருக்கு பயிற்சியாளர் தக்க பதிலை அளித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் 17 வயதில் அணிக்காக அறிமுகமாகி, தொடர்ந்து பல தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார்.
சமீபகாலமாக அவ்வப்போது காயத்தால் அவதிப்பட்டு வந்ததால், தொடர்ந்து அணியில் ஆட முடியாமல் தவித்து வந்தார். காயத்தை கருத்தில்கொண்டு கடந்த 2019 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக முடிவு செய்திருந்தார்.
பாகிஸ்தான் அணிக்காக 36 போட்டிகளில் ஆடியுள்ள ஆமீர் 28 வயதில் டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்தார். இதனால் தொடர்ந்து பல விமர்சனங்களுக்கு ஆளானார்.
தற்போது, கரோனா வைரஸ் பரவிவரும் காரணத்தினால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அனைத்து கிரிக்கெட் போட்டிகள் காலவரையறை இன்றி தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன. மெதுவாக பலநாடுகளில் வீரர்கள் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் வீரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் 3 டி20 போட்டிகளில் ஆட உள்ளது. இந்த தொடருக்கு வீரர்களை தயார் படுத்த பாகிஸ்தான் அணி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இங்கிலாந்து டூருக்கு தான் வரப்போவதில்லை என முடிவினை அணி நிர்வாகத்திற்கு தெரிவித்திருக்கிறார். இதில் கடுப்பான ரசிகர்கள் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இதனைக் கண்டு விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உள் ஹக் கூறுகையில், “ஒவ்வொரு வீரரின் முடிவினையும் அணி நிர்வாகம் மதிக்கிறது. அவர்களுக்கான உரிய மரியாதையும் அளிக்கிறது. அதில் சந்தேகப்பட ஏதும் இல்லை. அவர்களின் சொந்த காரணத்திற்காக எடுத்துள்ள முடிவு என நம்புகிறோம்.” என்றார்.
முகமது அமீரின் மனைவி இரண்டாவது முறையாக கர்பமாக உள்ளார். இந்த காலத்தில் அவருடன் இருப்பதற்காக இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை அமிர் தவிர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.