பயிற்சியாளர் பவார் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கிய மிதாலி ராஜ்-க்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் முன்னாள் கேப்டனும் மூத்த வீராங்கனையுமான மிதாலி ராஜ், அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வெளியே உட்கார வைக்கப்பட்டார்.
காயம் குணமடைந்த பிறகும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அணியில் மிதாலி ராஜை சேர்க்காததால் இந்திய அணி தோல்வி அடைந்ததாக பலரும் கூறிவந்தனர். இதுகுறித்து பிசிசிஐ-யிடம் மிதாலி ராஜ் சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்
மிதாலி ராஜின் சர்ச்சைக்குரிய நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். “மிதாலி ராஜ்க்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். 20 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு சிறந்த பங்களிப்பை தந்தார். அவர், டி-20 உலகக் கோப்பையில் இரண்டு ஆட்டநாயகி விருதை வென்றார். அவர் காயமடைந்திருந்தாலும் அடுத்த போட்டிக்கு உடற்தகுதி பெற்றுவிட்டார்.”
“விராட் கோலி ஒரு போட்டியில் காயமடைந்து, நாக் அவுட் சுற்று போட்டிக்குள் உடற்தகுதி பெற்றுவிட்டால் கோலியை வெளியே உட்கார வைத்திருப்பீர்களா? உட்கார வைக்கத்தான் முடியுமா? மிதாலி ராஜ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரரை நாக் அவுட் சுற்றில் நீக்கியது மிக மோசமான முடிவு” என்று சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். மிதாலி ராஜ் மற்றும் ரமேஷ் பவார் ஆகியோர் இருவரும் மாறிமாறி குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றனர்.