2022 உலகக்கோப்பை தான் என்னோட அடுத்த இலக்கு; முன்னாள் கேப்டன் கொடுத்த பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
2022 உலகக் கோப்பையை எனது அடுத்த இலக்காக கொண்டு உள்ளேன் என மனம் திறந்து பேசியுள்ளார் மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ்.
1999ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான மிதாலி ராஜ் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். இந்திய அணிக்கு சில காலங்களில் கேப்டனாகவும் இருந்திருக்கிறார்.
ஒருநாள் அரங்கில் மகளிர் கிரிக்கெட் போட்டியில் அதிக போட்டிகள் ஆடிய வீராங்கனை என்ற பெருமையையும், அதேபோல் 6 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீராங்கனை என்ற பெருமையும் இவரைச் சேரும். இத்தகைய பல சாதனைகளையும் படைத்திருக்கும் இவர் விரைவில் ஓய்வு பெறுவார் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் நடந்த உரையாடலில் 2022 ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் ஆட போவதாகவும் அந்த உலகக் கோப்பைக்காக உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் மிதாலி ராஜ்.
ட்விட்டர் பக்கத்தில் ஐசிசி தரப்பு, ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் தள்ளிப் போனதால் பெண்கள் உலகக்கோப்பை தொடரும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது என தெரிவித்திருந்தது.
இதற்கு ஆஸ்திரேலிய வீராங்கனை லிசா என்பவர் தெரிவித்த கருத்தில், “உலக கோப்பை தொடர் ஓராண்டு தள்ளிப் போவதால் இந்த வருடம் உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெற இருந்த முக்கியமான வீராங்கனைகள் அந்த திட்டத்தை அடுத்த ஓராண்டு வரை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், “கண்டிப்பாக எனது எண்ணமும் 2022 உலகக் கோப்பை நோக்கியே இருக்கிறது. அதற்காக உடலளவிலும் மனதளவிலும் மிகவும் தயாராக இருக்கிறேன். முன்பை விட இன்னும் இளமையாக உணர்கிறேன். நிச்சயமாக 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை ஆடுவேன்.” என தெரிவித்திருக்கிறார்.
இதைக் கேட்டதும் ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.