நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவிய இந்திய அணிக்கு மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா எளிதாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்றே பல கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்திருந்தனர். ஆனால், அனைவரின் கணிப்பும் இன்று பொய்யாக நியூசிலாந்து அணி இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முதல் அணியாக நுழைந்துள்ளது.
இந்தியாவின் இந்த தோல்வி கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்து இருந்தாலும், அணியின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய தோனி மற்றும் ஜடேஜாவின் முயற்சிக்கு ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
இந்திய அணியின் இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி,
‘இறுதிவரை வெற்றிக்காக போராட்ட குணத்துடன் ஆடிய இந்திய அணிக்கு தோல்வி கிடைத்தது ஏமாற்றம் தருவதாக அமைந்துவிட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதிலும் இந்திய அணியினர் சிறப்பாக பந்துவீசினர், சிறப்பாக பேட்டிங் செய்தனர்’ என்று கூறியுள்ளார்.
அதேபோல் காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இதுகுறித்து தனது ட்விட்டரில், ‘இன்று கோடிக்கணக்கானவர்களின் இதயம் நொறுங்கிவிட்டது. இருப்பினும் இந்திய அணியின் இந்த போராட்டம் மிகவும் மரியாதைக்குரியது. நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். உலகக்கோப்பையை வெல்லவும் வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.
நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் மோதுகின்றன. இப்போட்டி பிர்மிங்ஹாம் மைதானத்தில் மதியம் 3 மணியளவில் நடக்கிறது. இதில் வெல்லும் அணி இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதும்.
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்குள் நுழைவது இது இரண்டாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.