கொரோனா பரிசோதனையில் தேறிய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் பாகிஸ்தான் அணியில் இணைந்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஆக. 5ல் மான்செஸ்டரில் துவங்குகிறது. இதற்காக ஏற்கனவே இங்கிலாந்துக்கு வந்த பாகிஸ்தான் அணியினர், ஐ.சி.சி., வழிகாட்டுதலின் படி தனிமைப்படுத்திக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர், கடந்த ஜூலை 24ல் இங்கிலாந்துக்கு வந்தார். ஐ.சி.சி., வழிகாட்டுதலின்படி தனிமைப்படுத்திக் கொண்ட இவருக்கு, 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்ததால் சகவீரர்களுடன் இணைந்தார்.
இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று முதலில் உறுதியானது.
10 வீரர்களில், ஆறு வீரர்களுக்கும் இருமுறை நெகடிவ் என முடிவு வந்ததால் அனைவரும் இங்கிலாந்துக்குச் சென்றார்கள். பிறகு மூன்று வீரர்கள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு அவர்களும் இங்கிலாந்து சென்ற நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் மட்டும் தனியாக பாகிஸ்தானில் மாட்டிக்கொண்டார்.