என்னை பஸ் டிரைவர் என கூறினார் நாஸர் ஹூசைன்… நினைவுகளை பகிரும் கைஃப்
2002-ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியின் போது, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தன்னை பஸ் டிரைவர் என்று அழைத்ததாக முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.
முகமது கைஃப் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது, ஒரு ரசிகர், நீங்களும் யுவியும் நாட்வெஸ்ட் இறுதிப்போட்டியின்போது என்ன பேசிக் கொண்டீர்கள்? இங்கிலாந்து வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்தார்களா என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த கைஃப், “ஆம், நாசர் ஹுசைன் என்னை பஸ் டிரைவர் என்று அழைத்தார். அவர்களை (அந்த ஆட்டத்திலேயே) ஒரு நல்ல சவாரிக்கு அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி” என்றார்.
2002-ஆம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் 325 ரன்களை இந்திய அணி வெற்றிகரமாக விரட்டி தொடரைக் கைப்பற்றியது. இப்போட்டியில் கைஃப் மற்றும் யுவராஜ் சிங் இணையின் ஆட்டமே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாய் அமைந்தது. கைஃப் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த விறுவிறுப்பான போட்டியின் வெற்றித் தருணத்தில், அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த கங்குலி தனது சட்டையைக் கழற்றிச் சுற்றிய தருணம் புகழ்பெற்றது. ஒருநாள் போட்டி வரலாற்றில் முக்கியமான போட்டிகளில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது.