ஹாமில்டன் டி20 போட்டி த்ரில் போட்டியாக அமைந்தது, மொகமது ஷமியின் அதியற்புத, ஆக்ரோஷ கடைசி ஓவரில் வில்லியம்சன், டெய்லரை வீழ்த்த இரு அணிகள் ஸ்கோரும் 179 என்று சமன் ஆனது. பிறகு சூப்பர் ஓவருக்கு ஆட்டம் செல்ல வெற்றி பெறத் தேவையான 18 ரன்களை ரோஹித் சர்மா கடைசி 2 பந்துகளில் அடித்த அதியற்புத சிக்சர்களினால் இந்திய அணி இலக்கைக் கடந்து அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்று கைப்பற்றியது.
முகமது ஷமியின் ஆக்ரோஷ கடைசி ஓவர்:
19-வது ஓவரில் பும்ரா 11 ரன்களை கொடுக்க நியூஸிலாந்து அணி 171/4 என்று வெற்றி இலக்கை நெருங்கியது, கடைசி ஓவரில் 9 ரன்கள் வெற்றிக்குத் தேவை, மொகமது ஷமியிடம் பந்து கொடுக்கப்பட்டது.
ராஸ் டெய்லர் முதல் பந்தை எதிர்கொண்டார். ஷமி ஓடி வந்து ஒரு ஃபுல்டாஸை அழகான உயரத்தில் வீச ராஸ் டெய்லர் வலது காலை விலக்கிக் கொண்டு ஒரே தூக்குத் தூக்கினார். டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸ்.
5 பந்துகளில் 3 எடுத்தால் வெற்றி. அடுத்த பந்து யார்க்கர் லெந்த், டெய்லர் லாங் ஆனில் தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க 48 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என்று படு ஆக்ரோஷமாக ஆடி 95 ரன்கள் எடுத்திருந்த கேன் வில்லியம்சன் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார், சரி அவ்வளவுதான் பவுண்டரியோ அல்லது சிக்ஸ் நியூஸி வெற்றி என்று அனைவரும் நாற்காலி முனைக்கு நகர, முகமது ஷமி ஒரு பந்தை மால்கம் மார்ஷல் ஸ்டைலில் ஷார்ட் ஆகக் குத்தி எழுப்பி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே கொண்டு சென்றார், கல்லி பீல்டரும் நிறுத்தப்பட்டிருந்தார், வில்லியம்சன் இந்தப் பந்தை தூக்கி தேர்ட் மேனில் அடிக்க நினைத்து எட்ஜ் ஆக ராகுல் கேட்சை எடுத்தார்.
செய்ஃபர் கிரீசுக்கு வந்தார். 3 பந்துகளில் 2 ரன்கள். தேர்ட்மேன், பைன் லெக் மீண்டும் பின்னால் செல்ல, ஷமி மீண்டும் மார்ஷல் பாணியில் ஒரு ஷார்ட் பிட்ச் ஆஃப் ஸ்டம்ப் பந்தை குத்தி எழுப்ப செய்பர்ட் மட்டைக்குச் சிக்காமல் பந்து பின்னால் சென்றது டாட் பால், 2 பந்து 2 ரன்கள் தேவை. மீண்டும் ஷமி 5வது பந்தை அதே பாணியில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே குத்தி எழுப்பிக் கொண்டு செல்ல செய்பர்டுக்கு சிக்கவில்லை, ஆனால் ராகுலிடம் பந்து செல்லும் முன் இருவரும் ஒரு ரன்னை ‘பை’யாக எடுத்து முடித்தனர். கடைசி பந்து வெற்றி பெற ஒரே ரன் தேவை, ராஸ் டெய்லர் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். இதுவரை ஷார்ட் பிட்ச் குத்தி வெளியே எடுத்த ஷமி யார்க்கர் லெந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வீச டெய்லர் அதனை லெக் திசையில் விளாச நினைத்தார் ஆனால் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆக ஆட்டம் பரபரப்பாக டை ஆனது. சிக்சருக்குப் பிறகு ஷமி ஆக்ரோஷமாக வீசி மேட்சை ‘டை’ ஆக்கினார், ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது.