உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேல ; சுப்மன் கில்லை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்..
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடிய விதம் ஏமாற்றத்தை கொடுப்பதாக சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று. இந்த தொடரில் காயம் காரணமாக ரோஹித் சர்மா இடம்பெறாததால் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரோகித் சர்மாவின் இடத்தில் சுப்மன் கில் துவக்க வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சுப்மன் கில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 20 ரன்கள் எடுத்த நிலையில், தைஜுல் இஸ்லாம் வீசிய பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சி செய்து தன்னுடைய விக்கெட்டை இழந்துள்ளார்.
சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 22 இன்னிங்ஸில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பதால் அவர் மீதான நெருக்கடி தற்பொழுது உண்டாகியுள்ளது.இதன் காரணமாக முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் சுப்மன் கில்லுக்கு தேவையான அறிவுரைகளை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து அதிகமாக பேசி வரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், சுப்மன் கில் கவனக்குறைவாக விளையாடிய விதம் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சல்மான் பட் தெரிவித்ததாவது, “டெஸ்ட் போட்டியில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சி செய்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுப்பது என்பது கவனக்குறைவான ஒன்றாகும், கிரீசில் எந்த ஒரு பயமும் இல்லாமல் பந்து வீச்சாளர்களை எளிதாக கையாண்டார் அந்த சமயம் அவரை பார்க்கையில் முன்னாள் ஜாம்பவான்களான மார்க் வாக் அல்லது டாமினியன் மார்ட்டின் போன்று காட்சியளித்தார். ஆனால் உடனே தன்னுடைய விக்கெட்டை இழந்துவிட்டார்”.
“சுப்மன் விளையாடும் விதம் விகாரமாக உள்ளது, இவ்வளவு அதிகமான வாய்ப்புகள் கிடைத்தும் அவரால் 30-40 ரன்களை தான் எடுக்க முடிகிறது,அதை அதற்கு மேல் எடுத்து செல்லமுடியவில்லை,எனவே அவர் இனிமேல் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும், போட்டியை ரசித்து சரியான ஷாட்களை தேர்வு செய்ய வேண்டும்” என சுப்மன் கில்லுக்கு அறிவுரை கொடுத்துள்ளார்.