கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் மோர்னே மார்கல்
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மார்கல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரும், வேகப்பந்து வீச்சாளருமான மோர்னே மார்கல், கடந்த 2006ம் ஆண்டு முதல் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியுடனான தனது கிரிக்கெட் பயணத்தை துவங்கினார்.
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்காக இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளிலும், 117 ஒருநாள் போட்டிகளிலும், 44 டி.20 போட்டிகளிலும் மோர்னே மார்கல் விளையாடியுள்ளார்.
தற்போதைய தென் ஆப்ரிக்கா அணியில் இருக்கும் சீனியர் வீரர்களில் ஒருவரான இவர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்று பேசிய மோர்னே மார்கல், இது நான் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த முடிவு தான், இருந்தாலும் இதுவே நான் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதற்கும் எனது புதிய வாழ்க்கையை துவங்குவதற்கும் இதுவே சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். எனக்கு ஒரு குழந்தையும், அழகான மனைவியும் உள்ளனர். தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் என்னால் அவர்களுடன் நேரத்தை செலவிட முடியவில்லை. இதனால் எனது தனிப்பட்ட வாழ்வில் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. தென் ஆப்ரிக்கா அணிக்காக, தென் ஆப்ரிக்காவின் ஜெர்சியுடன் விளையாடிய ஒவ்வொரு நிமிடம் அழகானது.
இந்த நேரத்தில் எனக்கு இத்தனை ஆண்டு காலம் உறுதுணையாக இருந்த எனது சக வீரர்களுக்கும், எனது குடும்பத்திற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.