அடுத்த ஐபிஎல் தொடரில் இந்த வீரரை எடுப்பதற்கு பல அணிகள் போட்டி போடும் என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் கடந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 10.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர், 13 போட்டிகளில் வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவரது ஸ்டிரைக் ரேட் கிட்டத்தட்ட 100 மட்டுமே இருந்தது.
மிகவும் சொதப்பலான சீசனாக அமைந்த இவருக்கு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அப்படியே தலைகீழாக மாறியது. ஏனெனில் 3 போட்டிகளில் 167 ரன்கள் அடித்திருக்கும் இவர் இரண்டு அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 200.
மிகச்சிறந்த பார்மில் இருக்கும் இவர் இரண்டாவது போட்டியில் வெறும் 29 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். அதேபோல் மூன்றாவது போட்டியில் 38 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார். மேலும் பந்து வீச்சிலும் ரன் ப்களை கட்டுப்படுத்தி ஓரிரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
ஒரு முழு ஆல்-ரவுண்டராக செயல்படும் இவரை பெருமிதமாக பேசியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். அவர் கூறுகையில்,
“மேக்ஸ்வெல் போன்ற ஒரு வீரரை எந்த ஒரு அணியும் வேண்டாம் என்று சொல்லாது. அடுத்த ஐபிஎல் தொடரில் இவரை ஏலத்தில் எடுப்பதற்கு பல அணிகள் போட்டி போடும் என நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலிய அணி அவருக்கு சரியான இடத்தை கொடுத்திருக்கிறது. சில நேரங்களில் 5-வது இடத்திலும் சில நேரங்களில் 7வது இடத்திலும் களமிறங்குகிறார். குறிப்பாக கடைசி 15 ஓவர்களில் அவரை நன்றாக பயன்படுத்துகிறார்கள். 20 ஓவர் போட்டிகளில் கடைசி 6, 7 ஓவர்கள் இவருக்குக் கிடைத்தால் அணியின் ஸ்கோர் மளமளவென உயரும். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் நன்றாக செயல்படும் இவரை மற்ற அணிகள் எடுப்பதற்கு எதற்காக தயங்க வேண்டும். நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய தொகை காத்திருக்கிறது என்றே கூறுவேன்.” என பேட்டியளித்தார்.