ஒரே வருடத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆசிய பந்து வீச்சாளர்: பும்ரா சாதனை!!

ஒரே வருடத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆசிய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜஸ்பிரிட் பும்ரா.

பும்ரா – 45 விக்கெட் (2018)
ஷமி – 43 விக்கெட் (2018)
இம்ரான் கான் – 42 விக்கெட் (1977)

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

MELBOURNE, AUSTRALIA – DECEMBER 28: Ishant Sharma of India celebrates after dismissing out Aaron Finch of Australia during day three of the Third Test

பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார்.

22 ரன்கள் சேர்த்து இருந்த மார்கஸ் ஹாரிஸ் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பிஞ்ச் 8 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில், மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் கவாஜாவும் நீடிக்கவில்லை. அவர் 21 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷான் மார்ஷ் 61 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் பும்ரா பந்தில் கிளீன் போல்டு ஆனார். மிட்செல் மார்ஷ் 9 ரன்களில் ஜடேஜா பந்தில் விக்கெட்டை தாரை வார்த்தார். ஆஸ்திரேலிய அணி, தேநீர் இடைவேளையின்போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.

விக்கெட்டைக் காப்பாற்ற போராடிய கம்மின்ஸ் 17 ரன்களிலும், பெயின் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். லயன் மற்றும் ஹாசில்வுட் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலிய அணி 151 ரன்களில் சுருண்டது.

இந்தியா தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜடேஜா 2 விக்கெட், இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, 2ம் இன்னிங்சை ஆடி வருகிறது.

 

Sathish Kumar:

This website uses cookies.