5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியல்!

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 5-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது இந்தியா. இதன் மூலம் 5-0 என முழுமையாக டி20 தொடரை வென்ற முதல் அணி என்ற சிறப்பைப் பெற்றது. முதலில் ஆடிய இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய நியூஸி அணி 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்தத் தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்:

அதிக ரன்கள்

 

எண்    பெயர்  ஆட்டங்கள்  ரன்கள்  ஸ்டிரைக்   ரேட்  சிக்ஸர்கள் 
 1.  கே.எல். ராகுல்   (இந்தியா)  5  224  144.51  10
 2.  மன்ரோ (நியூஸி)  5  178  130.88  7
 3.  டெய்லர் (நியூஸி)  5  166  131.74  6
 4.  வில்லியம்சன் (நியூஸி)  3  160  170.21  10
 5.  ஸ்ரேயஸ் ஐயர்   (இந்தியா)  5  153  131.89  9

 

அதிக விக்கெட்டுகள்

 

எண்    பெயர்  ஆட்டங்கள்    விக்கெட்டுகள்   எகானமி          சிறந்த   பந்துவீச்சு 
 1.  ஷர்துல் தாக்குர்   (இந்தியா)  5  8  9.81  2/21
 2.  பும்ரா (இந்தியா)  5  6  6.45  3/12
 3.  சோதி (நியூஸி)  5  6  7.30  3/26
 4.  பென்னட் (நியூஸி)  5  6  9.52  3/54
 5.  ஜடேஜா (இந்தியா)  3  4  5.90  2/18

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா அபாரமாக விளையாடி 5-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டி தொடரின் நாயகனாக கே.எல்.ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. நேற்றையப் போட்டியில் ரோகித் சர்மாதான் கேப்டனாக இருந்தார். ஆனால் அவர் பேட்டிங் செய்யும்போது எதிர்பாராதவிதமாக காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தன் வசமாக்கினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எல்.ராகுல் ” எனக்கு அளிக்கப்படும் சவால்களை இப்போது விரும்ப ஆரம்பித்துள்ளேன். விராட் கோலியும், ரோகித் சர்மாவும் அணியில் இல்லாத நிலையில் நாங்கள் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. அனுபவம் வாய்ந்த இருவரும் மைதானத்தில் இல்லாததால் நிறைய கேள்விகள் எழுந்தன. நான் கேப்டனாக இருந்தாலும் எல்லோரும் அவரவர் பொறுப்புகளை உணர்ந்து விளையாடினார்கள்” என்றார்.

மேலும் தொடர்ந்த ராகுல் ” பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிப்பார்கள் என்று நம் பவுலர்களுக்கு தெரியும். ஆனால் அப்போதும் புதுப்புது யுக்தியை கையாண்டார்கள். இதுபோன்ற செயல்பாடுகள்தான் டி20 போட்டிகளுக்கு முக்கியம். விராட் கோலி இல்லாமல் விக்கெட் கீப்பிங் பணியில் ஈடுபட்டுக்கொண்டு, என்னால் பெரியளவில் ஏதும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் பவுலர்களுக்கு யோசனையை கூற முடியாது. எனினும் பவுலர்கள் திறம்பட செயல்பட்டு வெற்றியை வசமாக்கினார்கள்” என்றார் அவர்.

Sathish Kumar:

This website uses cookies.