தோனி சொன்னார்.. நாங்க செஞ்சோம்; சென்னை அணி வெளியிட்ட புதிய தகவல்
துபாய் செல்வதற்கு முன்பு சென்னை அணியிலும் பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என தோனி தான் கேட்டதாக சென்னை அணியின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் செப்டம்பர் 19ம் தேதி துவங்க உள்ளது.
கொரோனாவின் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாத சூழல் நிலவுவதால் யுனைடெட் அராப் எமிரேட்ஸில் இந்த வருடத்திற்கான தொடர் நடக்க உள்ளது.
இந்த தொடருக்காக துபாய் சென்றுள்ள வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு வளையத்திற்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர். விரைவில் தங்களது பயிற்சியை துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற அணி வீரர்கள் இனி தான் தங்களது பயிற்சியை துவங்க இருக்கும் நிலையில், தோனி தலைமையிலான சென்னை அணியோ துபாய் செல்வதற்கு முன்பு சென்னையிலேயே ஒரு வார பயிற்சி முகாமை நடத்தியது.
இந்தநிலையில், தோனி கேட்டு கொண்டதற்கு இணங்கவே சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டதாக சென்னை அணியின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை அணியின் சி.இ.ஒ காசி விஸ்வதாநாதன் கூறியதாவது;
ஐபிஎல் போட்டிகள் நடைபெறபோகிறது என தெரிந்தவுடன் பயிற்சி முகாமை நடத்துவதற்கு எனக்கு சில தயக்கங்கள் இருந்தன. பயிற்சியை நடத்துவதற்கு கொரோனா தடுப்பு உயிரி பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போது பயிற்சி குறித்து தோனியிடம் ஆலோசனை கேட்பதற்காக மெஸேஜ் அனுப்பினேன். ஆனால் தோனி பயிற்சி முகாம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நான்கு மாதத்திற்கு மேல் பயிற்சியே இல்லாமல் இருந்ததால் நிச்சயம் வீரர்களுக்கு பயிற்சி தேவை என்று கூறினார். அவர் கேட்டு கொண்டதன் காரணமாகவே சென்னையில் பயிற்சி முகாமை நடத்தினோம்” என்றார்.